×

பட்ஜெட்டில் சேலம்-சென்னை 8 வழிச்சாலை அறிவிப்பு: மத்திய அரசின் சர்வாதிகார போக்கின் வெளிப்பாடு விவசாயிகள் பரபரப்பு குற்றச்சாட்டு

சேலம், பிப்.2: சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், திட்டத்தை செயல்பட அனுமதி அளித்ததுடன், புதிய அறிவிக்கை வெளியிட்டு நிலங்களை கையப்படுத்தலாம் என தெரிவித்தது. இதனால் அதிருப்தியடைந்த 8 வழிச்சாலையால் பாதிக்கப்படும் விவசாயிகள், மத்திய, மாநில அரசுகள் தாமாக முன்வந்து திட்டத்தை முழுமையாக கைவிட வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, நேற்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய அரசின் பட்ஜெட்டில், சேலம்-சென்னை இடையே 277 கிலோ மீட்டருக்கு சாலை அமைக்க டெண்டர் விடப்பட்டு, 2021-22ம் ஆண்டில் பணிகள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்புக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து 8 வழிச்சாலை போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் மோகன சுந்தரம் கூறியதாவது: விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை காக்க போராடி வரும் நிலையில், மத்திய, மாநில அரசுகள் அதனை கண்டுகொள்ளாமல் சர்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டு வருகின்றன. அதன் வெளிப்பாடாகவே, பட்ஜெட்டில் சேலம்-சென்னை சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் கண்டனத்திற்குரியது. விவசாயிகள் 3 ஆண்டுகளாக போராடி வரும் நிலையில், அதனை பரிசீலனை கூட செய்ய இந்த அரசுகள் முன்வரவில்லை. குறைந்தபட்சம், விவசாயிகளை அழைத்து பேச கூட, தமிழக முதல்வர் மறுத்து வருகிறார். நாங்கள் கூறுவது தான் சட்டம் என்ற அடிப்படையில், மத்திய அரசு மக்களுக்கு எதிரான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

விவசாயிகளுக்கான திட்டம் என அறிவிக்கப்பட்ட, கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தை கண்டுகொள்ளாத முதல்வர், கார்ப்ரேட் முதலாளிகளுக்காக 8 வழிச்சாலையை அமைக்க முனைப்பு காட்டுவது வேதனை அளிக்கிறது. எனவே, 8 வழிச்சாலை திட்டத்தை முழுமையாக கைவிட வலியுறுத்தி, வரும் 11ம் தேதி சட்டமன்ற முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுகிறோம். இவ்வாறு மோகனசுந்தரம் கூறினார்.

Tags : Salem ,Chennai ,announcement ,Explosion ,government ,
× RELATED ஓமலூரில் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை..!!