×

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்பில் ரூ.100.85 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (5.2.2026) தலைமைச் செயலகத்தில், பால்வளத் துறையின் கீழ், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்பில் நாமக்கல் மாவட்டம், லத்துவாடியில் 89.28 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 2 இலட்சம் லிட்டர் பால் கையாளும் திறன் கொண்ட அதிநவீன பால்பண்ணை, சென்னை, அம்பத்தூரில் 11.57 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகம் ஆகிய முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார். மேலும், பால் உற்பத்தியாளர்கள், பால் நுகர்வோர் கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு ரூ.1,000 மாதாந்திர கருணை ஓய்வூதியத்தினை வழங்கினார்.

ஆவின் நிறுவனம் கிராம அளவில் 9089 தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்கள், மாவட்ட அளவில் 27 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்கள் மற்றும் மாநில அளவில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் என்ற மூன்று அடுக்கு கட்டமைப்பில் செயல்பட்டு வருகிறது. ஆவின் நிறுவனம் தற்போது 3.47 இலட்சம் உற்பத்தியாளர்கள் மூலம் நாளொன்றுக்கு சராசரியாக 37.92 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து 31 லட்சம் லிட்டர் பாலை நாள்தோறும் நுகர்வோருக்கு தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்து வருகிறது. இந்திய அளவில் கூட்டுறவு அமைப்பின் கீழ் பால் கொள்முதல் செய்யும் மாநிலங்களில் தமிழ்நாடு நான்காவது இடத்தை பெற்றுள்ளது.

ஆவின் நிறுவனத்தின் சார்பில் திறந்து வைக்கப்பட்ட முடிவுற்ற பணிகளின் விவரங்கள்
ஆவின் பால் பதப்படுத்துதல் திறன் அதிகரிக்கவும், விற்பனையை உயர்த்தவும், நுகர்வோர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையிலும், நாமக்கல் மாவட்டம், மோகனூர் வட்டம், லத்துவாடியில் 89.28 கோடி ரூபாய் செலவில் நாளொன்றுக்கு 2 இலட்சம் லிட்டர் பால் கையாளும் திறன் கொண்ட அதிநவீன பால்பண்ணையை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார். இதன்மூலம் சுமார் 310 கிராமங்களில் உள்ள விவசாயிகளிடமிருந்து நேரடியாக பால் கொள்முதல் செய்யப்படும். மேலும், 58,546 விவசாயிகளுக்கும், 504 மாவட்ட கூட்டுறவு சங்கங்களுக்கும் மற்றும் சுமார் 50 தளவாட வழங்குநர்களுக்கும் மறைமுக வேலைவாய்ப்பை வழங்கும். இம்மாவட்டத்தில் சுமார் 1,22,360 விவசாய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதோடு, சுமார் 150 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பும் உருவாகும். பால் மற்றும் பால் பொருட்கள் தரத்தினை உயர்த்துவதற்கும், நுகர்வோரின் தேவைக்கு ஏற்ப புதிய பால் பொருட்கள் உற்பத்தி செய்யவதற்கான ஆராய்ச்சி பணிகளை மேற்கொள்ளவும் சென்னை, அம்பத்தூரில் 11.57 கோடி ரூபாய் செலவில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.

ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு மாதம் ரூ.1,000 கருணை ஓய்வூதிய திட்டம்
பால் கூட்டுறவு சங்கப் பணியாளர்களின் சமூகப் பாதுகாப்பிற்காகவும் பால் கூட்டுறவு சங்கப் பணியாளர்களின் பணியை அங்கீகரிக்கும் வகையிலும் பால் கூட்டுறவுச் சங்கங்களில் ஐந்து ஆண்டுகளுக்கு குறையாமல் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு 2026 பிப்ரவரி மாதத்திலிருந்தும், தற்போது பணியாற்றி வரும் சங்கங்களின் பணியாளர்களுக்கு அவர்கள் ஓய்வு பெறும் மாதத்திலிருந்தும் ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 வழங்கும் மாதாந்திர கருணை ஓய்வூதியத் திட்டத்தினை தொடங்கி வைக்கும் அடையாளமாக தமிழ்நாடு முதலமைச்சர் 5 ஓய்வுபெற்ற சங்கப் பணியாளர்களுக்கு ஓய்வூதியத்திற்கான ஆணைகளை வழங்கினார். இதன்மூலம் சங்கங்களிலிருந்து ஏற்கனவே ஓய்வு பெற்ற 2,335 பணியாளர்களும் தற்போது பணியில் உள்ள 13,042 பணியாளர்களும் பயன்பெறுவர்.

இந்நிகழ்ச்சியில், பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ், அரசு தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், இ.ஆ.ப., கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறைச் செயலாளர் டாக்டர் என். சுப்பையன், இ.ஆ.ப., பால்வளத்துறை இயக்குநர் மற்றும் மேலாண்மை இயக்குநர் அ.ஜான் லூயிஸ், இ.ஆ.ப., தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் இணை மேலாண்மை இயக்குநர் ச.கவிதா, இ.ஆ.ப., ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

Tags : Tamil Nadu Dairy Producers Cooperative ,Tamil Nadu Milk Producers Cooperative Internet ,K. Stalin ,Chennai ,Chief Minister of ,Tamil ,Nadu ,Dairy Department ,Namakkal District, Latuwadi ,
× RELATED 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கான 12 மணி...