×

மேட்டூரில் மரணமடைந்த தியாகியின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தாமல் அலைகழித்த தாசில்தார் குடும்பத்தினர் வேதனை

மேட்டூர், பிப்.2: மேட்டூர் ஜீவா நகரில் வசித்து வந்தவர் குஞ்சப்பநாயர்(99). கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் தலிப்பசமா பகுதியை பூர்வீகமாக கொண்ட இவர், 1944ம் ஆண்டு 2ம் உலகப்போரில் பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்ந்து ஜப்பானை எதிர்த்து போரிட்டவர். அதன் பிறகு ராணுவத்திலிருந்து விலகி 1946ல் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டார். இதற்காக 2 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். இவருக்கு கமலாட்சி(86) என்ற மனைவியும், ராஜன்(60), சதாசிவம்(58), ஸ்ரீனிவாசன்(50) என்ற மகன்களும், சுலேகா(53) என்ற மகளும் உள்ளனர். இவர்கள் கடந்த 30 ஆண்டுக்கும் மேலாக மேட்டூர் ஜீவா நகரில் கூட்டுக்குடும்பமாக வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், முதுமை காரணமாக கடந்த 30ம் தேதி குஞ்சப்பநாயர் உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகன்  ஸ்ரீனிவாசன், கேரள மாநிலம் கண்ணூர் மாவட்ட கலெக்டருக்கு தகவல் தெரிவித்தார். மேலும், சேலம் கலெக்டர் மற்றும் மேட்டூர் தாசில்தாரின் மின் அஞ்சல் முகவரிக்கும் தகவல் அனுப்பினார். ஜனவரி 31ம் தேதி மாலை 3 மணி வரை, மேட்டூர் தாசில்தார் சுமதி தனக்கு கண்ணூர் கலெக்டர் அலுவலகத்தில் இருந்தோ, சேலம் கலெக்டர் அலுவலகத்தில் இருந்தோ எவ்வித தகவலும் வரவில்லை எனக்கூறியுள்ளார். இதையடுத்து, தியாகியின் குடும்பத்தார் தாசில்தாரின் வீட்டிற்கே சென்று பலமுறை கூறியும், கண்ணூர் கலெக்டரின் கடிதத்தை வாட்ஸ் அப் மூலம் பெற்று வழங்கியும், மரியாதை செலுத்த செல்லவில்லை.

இதனால், அதிருப்தியடைந்த அப்பகுதி மக்கள், போராட்டம் நடத்தப்போவதாக கூறிய பிறகே, தாசில்தார் சுமதி தியாகி குஞ்சப்பநாயரின் வீட்டிற்கு சென்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய தியாகியின் கடைசி ஆசைப்படி, அவரது உடலுக்கு அரசு மரியாதை கிடைப்பதற்காக சடலத்தை வீட்டில் வைத்து விட்டு, தாசில்தாரின் வீட்டிற்கும், அலுவலகத்திற்குமாக குடும்பத்தினர் நடையாய் நடந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Tashildar ,Mettur ,
× RELATED 3 ஆண்டாக உரிய நேரத்தில் தண்ணீர் திறப்பு பருத்திக்கு நல்ல விலை கிடைக்கிறது