×

டெல்லி செல்வதை தவிர்த்தார் ஓ.பி.எஸ்.சுடன் அதிமுக எம்.பி. விஜயகுமார் திடீர் சந்திப்பு

நாகர்கோவில், பிப்.2 :சசிகலா சென்ற கார் படத்தை டுவிட்டரில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய அதிமுக எம்.பி. விஜயகுமார், நேற்று திடீரென  துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை சந்தித்து பேசியது கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை முடிந்து விடுதலையான சசிகலா, பெங்களூரில் உள்ள பண்ணை வீட்டில் ஒரு வாரம் ஓய்வுக்கு பின் சென்னை திரும்ப உள்ளார். உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்த சசிகலா, சிகிச்சை முடிந்து  சென்ற கார், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்தி வந்த கார் ஆகும். அந்த காரில் அதிமுக கொடியும் கட்டப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினரும், கன்னியாகுமரி மாவட்ட அதிமுக முன்னாள் செயலாளருமான விஜயகுமார் தனது டுவிட்டர் பக்கத்தில், சசிகலா சென்ற கார் படத்தை பதிவிட்டு இருந்தார். இது அதிமுகவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சசிகலாவுக்கு ஆதரவு என்பதை விஜயகுமார் எம்.பி. சூசகமாக தெரிவிக்கிறாரா? என்ற கேள்வியும் எழுந்தது. இதற்கு பலரும் லைக் தெரிவித்து இருந்தனர்.
விஜயகுமார் எம்.பி.யிடம் கேட்ட போது, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பயணித்த கார் என்பதுடன், அதிமுக கொடியும் கட்டப்பட்டு இருந்தது. பார்ப்பதற்கு அழகாக இருந்ததால் பதிவிட்டேன் என்றார். இருப்பினும், இந்த டுவிட்டர் பதிவு விவாதத்துக்கு உள்ளாகி உள்ளது.

வழக்கமாக நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது விஜயகுமார் எம்.பி. டெல்லி செல்வார். நேற்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையிலும் அவர் டெல்லி செல்லவில்லை. நேற்று காலை திடீரென நாகர்கோவிலில் இருந்து புறப்பட்ட அவர், மதுரை சென்றார். மதுரையில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை அவர் சந்தித்து பேசினார். ஏற்கனவே திட்டமிடப்பட்டு நடந்த சந்திப்பாக இது பார்க்கப்படுகிறது. சசிகலா சென்ற கார் படத்தை டுவிட்டரில் பதிவிட்டு வாழ்த்து தெரிவித்த மறுநாள் இந்த சந்திப்பு நடந்தது பல்வேறு யூகங்களை ஏற்படுத்தி உள்ளது.

Tags : AIADMK ,meeting ,Delhi Vijayakumar ,
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...