×

ஆண்டிபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் வாரச்சந்தை வியாபாரிகள் தர்ணா போராட்டம் தற்காலிக கடைகளை மாற்ற வலியுறுத்தல்

ஆண்டிபட்டி, பிப். 2: ஆண்டிபட்டியில் வாரந்தோறும் திங்கள்கிழமை வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த சந்தையில், காய்கறிகள், பலசரக்கு பொருட்கள் ஆகியவற்றை ஆண்டிபட்டி நகர் மக்கள் மட்டுமல்லாமல், வெளியூர்களைச் சேர்ந்த பொதுமக்களும் வாங்கிச் செல்கின்றனர்.

தேனி மாவட்டம் மட்டுமல்லாமல், வெளிமாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகளும் இங்கு வந்து விற்பனை செய்கின்றனர். இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு, கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு, சாலையோர வியாபாரிகள் வாரச்சந்தைப் பகுதியில் கடை அமைக்க, பேரூராட்சி நிர்வாகம் தற்காலிகமாக இடம் ஒதுக்கி தந்தது.

ஆனால், கொரோனா பாதிப்பு குறைந்த நிலையிலும், சாலையோர வியாபாரிகள் வாரச்சதை பகுதியில் கடை பரப்பி விற்பனை செய்து வருகின்றனர். இதனால், வாரச்சந்தை வியாபாரிகளுக்கு விற்பனை பாதிப்பதாக கூறப்படுகிறது. எனவே, தற்காலிக கடைகளுக்கு வேறு இடத்திற்கு மாற்றக்கோரி, கலெக்டர் அலுவலகம், பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், வாரச்சந்தை வியாபாரிகள் ஆண்டிபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் அரை மணி நேரத்துக்கும் மேலாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பேரூராட்சி அதிகாரிகள் வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சாலையோரா வியாபாரிகளுக்கு மாற்று இடம் அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை தொடர்ந்து வாரச்சந்தை வியாபாரிகள் கலைந்து சென்றனர்.

Tags : Warachchand traders ,protest ,municipality office ,Andipatti ,shops ,Dharna ,
× RELATED 6 வழிச்சாலை பணிக்கு எதிர்ப்பு...