×

புதுவையில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி வீரப்பமொய்லி உறுதி

புதுச்சேரி, பிப். 2: பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உண்மைக்கு புறம்பான தகவல்களை தெரிவித்துள்ளதாகவும், புதுச்சேரியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் என்றும் வீரப்பமொய்லி தெரிவித்துள்ளார்.  புதுச்சேரியில் நேற்று காங்கிரஸ் கட்சி தேர்தல் பொறுப்பாளர் வீரப்பமொய்லி நிருபர்களிடம் கூறியதாவது:  கடந்த 2 நாட்களாக புதுச்சேரியில் முகாமிட்டு காங்கிரஸ் கட்சியின் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பல்வேறு பிரிவு தலைவர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினோம். வரும் சட்டமன்ற தேர்தல் பிரசார யுக்திகள், பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. புதுச்சேரியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் என்பதை உறுதியாக நம்புகிறோம். முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசு பல்வேறு தடைகள், கட்டுப்பாடுகளை மீறி சிறப்பான முறையில் செயல்பட்டுள்ளது. குறிப்பாக புயல், கோவிட்-19 போன்ற பேரிடர் காலங்களில் இந்தியாவிலேயே மிகச்சிறப்பான முறையில் செயல்பட்டுள்ளனர். நிர்வாகத்தில் கொரோனா வைரசை விட கவர்னர் என்ற வைரசை எதிர்த்து தங்களுக்கு இடப்பட்ட பணிகளை செய்து முடித்துள்ளனர்.

 இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் கவர்னர் மூலம் ஆளும் அரசுக்கு பல்வேறு தொல்லைகளை கொடுத்தது புதுச்சேரியில்தான் நடந்தது. அதிகார துஷ்பிரயோகத்தை பயன்படுத்தி ஆளும் அரசை செயல்படவிடாமல் முடக்கினார்கள். ஆனால், இதையெல்லாம் தெரிந்து கொள்ளாமல் நேற்று முன்தினம் புதுச்சேரி வந்த பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உண்மைக்கு புறம்பான தகவல்களை தெரிவித்துள்ளார். குறிப்பாக மானியத்தை 70ல் இருந்து 30 சதவீதமாக மாற்றியமைத்தது காங்கிரஸ் ஆட்சியில் தான் என்பது உண்மையல்ல. புதுச்சேரியை நிதி கமிஷனில் சேர்க்க வலியுறுத்தியும், பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் ஏன் செய்யவில்லை.  7வது சம்பள கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்தியதற்கான நிலுவை தொகையை கூட மத்திய அரசு கொடுக்கவில்லை. இந்தியாவிலேயே அதிகப்படியான விருதுகளை வாங்கிய மாநிலம் புதுச்சேரி. இந்த விருதுகளை எல்லாம் நிரூபிக்கும் வகையில் வரும் தேர்தலில் காங்கிரசுக்கு வெற்றி என்ற விருதை மக்கள் வழங்குவார்கள். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது, முதல்வர் நாராயணசாமி, காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், தேர்தல் பொறுப்பாளர்கள் பல்லம்ராஜூ, நிதின் ராவத் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : Veerappa Moily ,Congress ,
× RELATED டிக்கெட் கிடைக்காததால் எந்த...