×

சர்வீஸ் ரோடு, நடைபாதை கேட்டு கோவில்பட்டி ஆர்டிஓ அலுவலகம் முற்றுகை

கோவில்பட்டி, பிப்.2: சர்வீஸ் ரோடு மற்றும் நடைபாதை அமைத்து தரக்கோரி கோவில்பட்டி ஆர்டிஓ அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இனாம்மணியாச்சி பஞ்சாயத்து மற்றும் கோவில்பட்டி நகராட்சிக்குட்பட்ட இந்திராநகர், சீனிவாச நகர், அத்தைகொண்டான், செண்பகவல்லி நகர், திலகர் நகர் மற்றும் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து ஒருங்கிணைப்பாளர் சுப்புராயலு தலைமையில் கோவில்பட்டி ஆர்டிஓ அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் வேலுச்சாமி, சுப்பராயன், பழனிகுமார், சங்கரகோமதி, பொன்னுதாய், ராஜம்மாள், பார்வதி, நடராஜன், ஜெயராம், ராமகிருஷ்ணன், வேம்பு, வாசு, திருப்பதி உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

பின்னர் அவர்கள், ஆர்டிஓ சங்கர நாராயணனிடம் அளித்த மனுவில்: கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்பட்ட இனாம்மணியாச்சி பஞ்சாயத்து இந்திராநகர், சீனிவாச நகர், அத்தகொண்டான், செண்பகவல்லி நகர் மற்றும் நகராட்சிக்குட்பட்ட திலகர் நகர், காந்தி நகர் பகுதியில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். தற்போது ரயில்வே இரண்டாவது லைன் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் இப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள், பொதுமக்கள், இருசக்கர வாகன ஓட்டிகள், ஆட்டோ, வேன் போன்றவை செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கோவில்பட்டி லட்சுமி மில் ரயில்வே கேட் முதல் இளையரசனேந்தல் ரோடு ரயில்வே சுரங்கப்பாலம் வரை சர்வீஸ் ரோடு மற்றும் நடைபாதை அமைத்து தர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர். மனுவை பெற்றுக் கொண்ட ஆர்டிஓ உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags : Service Road ,siege ,office ,Kovilpatti RDO ,
× RELATED நெற்குன்றம் அருகே சொகுசு காரில் கடத்திய 1 டன் குட்கா பறிமுதல்