×

பருவம் தவறி பெய்த மழையால் சேதமான பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்

தூத்துக்குடி, பிப்.2: பருவம் தவறிய மழையால் பயிர் சாகுபடி செய்து பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று கலெக்டர் செந்தில்ராஜ் கூறியுள்ளார். தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களின் கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை கொடுத்தனர்.  கூட்டத்தினைத்தொடர்ந்து, கலெக்டர் செந்தில்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த மார்ச் மாதம் கொரோனா பரவல் காரணமாக  நிறுத்தப்பட்டு இருந்த வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் பத்து மாதங்களுக்கு பிறகு தமிழக அரசின் உத்தரவுபடி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. கூட்டத்திற்கு வரும் மக்கள் முககவசம் அணிந்தும், தகுந்த சமூக இடைவெளியை கடைபிடித்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதற்கான தகுந்த ஏற்பாடுகள் அனைத்தும் அலுவலகத்தில் செய்யப்பட்டுள்ளது.  தூத்துக்குடி மாவட்டத்திற்கு கடந்த ஆண்டு கொடிநாள் வசூலாக ரூ.1.08 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இருந்தபோதும் கொரோனா பரவல் இருந்த காலத்திலும் கூட ரூ.84 லட்சம் கொடிநாள் வசூல் செய்து நமது மாவட்டம் சாதனை படைத்துள்ளது. அதிகப்படியான கொடிநாள் வசூலுக்கு உறுதுணையாக இருந்த அதிகாரிகள் அனைவரும் கவுரவிக்கப்பட்டுள்ளனர்.

 தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த வருடம் வழக்கம்போல சுமார் 1.50 லட்சம் ஹெக்டேர் நிலத்தில் மானாவாரி பயிர்களும், தோட்டப் பயிர்களும் பயிரிடப்பட்டு இருந்தது. இதில், அதிகப்படியாக 60ஆயிரம் ஏக்கரில் உளுந்தும், 40ம் ஆயிரம் ஏக்கரில் மக்காச்சோளமும், 20ஆயிரம் ஏக்கரில் பாசிப்பயிரும், இதர பகுதிகளில் வெங்காயம், மிளகாய் போன்ற பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில, பருவம் தவறி தொடர்ந்து பெய்த மழையால் கோவில்பட்டி, கயத்தார், விளாத்திகுளம்,  புதூர், கயத்தார் உள்ளிட்ட பகுதிகளில் 90ஆயிரம் ஹெக்டேர் மானாவாரி பயிர்களும், 15 ஆயிரம் ஹெக்டேரில் தோட்டப் பயிர்களும் சேதம் அடைந்துள்ளது.இதுபோன்று, தாமிரபரணி பாசனப்பகுதிகளில் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் வைகுண்டம், கருங்குளம் வட்டாரப் பகுதிகளில் 40ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளது.
தொடர்மழை மற்றும் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கிட ஏதுவாக வருவாய்த்துறை மற்றும் வேளாண்துறை மூலமாக பயிர் சேத மதிப்பு குறித்த  கணக்கெடுக்கப்பட்டு அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக, இந்த வருடம் மானாவாரி பகுதிகளில் நிலத்தை நில உரிமையாளர்களிடம் இருந்து குத்தகைக்கு எடுத்து பயிர் செய்திட்ட தகுதியான விவசாயிகள் அனைவருக்கும் சரியான முறையில் நிவாரணம் கிடைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பயிர்களை சாகுபடி செய்து மழையால் பாதிக்கப்பட்டுள்ள தகுதியான விவசாயிகள் அனைவருக்கும் பயிர்களுக்கான காப்பீட்டு தொகையும், நிவாரணமும் கிடைத்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் தொடர் மழையால் குடியிருப்பு பகுதிகளில் தேங்கி கிடக்கும் மழைநீரை அகற்றும் பணிகள் முழுமூச்சாக நடைபெற்று வருகிறது. தற்போதுள்ள சூழ்நிலையில் மாநகர் பகுதிகளில் மழைநீரை அப்புறப்படுத்திய பின்னர் மழைநீர் வடிகால்கள் அனைத்தும் தூர் வாரப்படும். அதோடு இனிவரும் காலங்களில் மாநகர் பகுதிகளில் மழைநீர் தேங்காமல் தடுத்திட ஏதுவாக மழைநீர் வடிகால்கள் இல்லாத இடங்களில் வடிகால்கள் அமைக்கப்படும். அடுத்தஆண்டு மழைக்காலத்திற்குள் மாநகரில் மழைநீர் தேங்காத வகையில் அதற்கான நிரந்தர தீர்வு காணப்படும்.

 தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை மற்ற மாவட்டங்களை காட்டிலும் கொரோனா பரவல் கட்டுக்குள்ளே இருந்து வருகிறது. நாள்தோறும், சராசரியாக 800முதல் 900 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. மாவட்டத்திலுள்ள அனைத்து மினி கிளினிக்குகளிலும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.  தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, கோவில்பட்டி, திருச்செந்தூர் அரசு மருத்துவமனைகள் உட்பட மாவட்டத்தில் மொத்தம் 15மையங்களில் தினசரி 1500பேர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. சுகாதாரப்பணியாளர்கள், முன்களப்பணியாளர்களுக்கு இந்த தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.  கொரோனா பரவல் கட்டுக்குள் இருந்தாலும், மக்கள் அரசின் அறிவுறுத்தல்படி முககவசம் அணிந்திடவும், சமூகஇடைவெளியை கடைபிடித்திடவும் வேண்டியது அவசியமாகும். உருமாறிய கொரோனா பரவல் காரணமாக தூத்துக்குடி விமான நிலையத்தில் வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவல் குறைந்து விட்டது என்பதற்காக அஜாக்கிரதையாக இல்லாமல் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். இதுதொடர்பான விழிப்புணர்வு தொடர்ந்து மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மூன்றாவது மாடிக்கு  மாற்றப்பட்ட கூட்டம்
தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தரைத்தளத்திலுள்ள அரங்கத்திலேயே நடத்தப்படுவது வழக்கமாகும். இந்நிலையில், கடந்த 10மாதங்களுக்கு பிறகு மீண்டும் நேற்று தொடங்கப்பட்டுள்ள மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தின் மூன்றாவது மாடியிலுள்ள முத்து அரங்கத்திற்கு மாற்றப்பட்டு அங்கு நடைபெற்றது. இதனால், மனு கொடுக்க வந்த வயதானவர்கள், பெண்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இதுகுறித்து கலெக்டரிடம் கேட்டபோது, தரைத்தளத்திலுள்ள அரங்கில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது என்றும் அதனால்  மூன்றாவது மாடியிலுள்ள இந்த அரங்கத்தில் கூட்டம் நடைபெறுகிறது. மனு கொடுக்க வரும் வயதானவர்கள் லிப்டினை பயன்படுத்திக்கொள்ளலாம் என்றார்.

Tags : Senthilraj ,
× RELATED தூத்துக்குடி ஆசிரியர் தின விழாவில்...