×

நெல்லை-திருச்செந்தூர் பயணிகள் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் பொதுமக்கள் வலியுறுத்தல்

செய்துங்கநல்லூர், பிப்.2: கொரோனா அச்சுறுத்தலால் 10 மாதமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நெல்லை-திருச்செந்தூர் பயணிகள் ரயிலை மீண்டும் இயக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த வழித்தடத்தில் அதிகளவில் சுற்றுலாத்தலங்களும், ஆன்மீக வழிபாட்டுத்தலங்களும் உள்ளது. திருச்செந்தூர் முருகன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. அந்த கோயில் ஆன்மீகத்தலம் மட்டுமல்லாமல் சுற்றுலாத்தலமாகவும் விளங்கி வருகிறது. இங்கு 10க்கும் மேற்பட்ட திருவிழாக்கள் நடைபெறுகிறது. மேலும் குலசேகரன்பட்டினம் பிரசித்தி பெற்ற முத்தாரம்மன் கோயில் உள்ளது. காயல்பட்டினத்தில் பிரசித்தி பெற்ற தர்காவும், கச்சனாவிளையில் வனத்திருப்பதிக்கும், குரும்பூர் அருகே நாலுமாவடியில் கிறிஸ்தவ கூடாரமும், வைகுண்டம் பகுதியில் நவத்திருப்பதி, நவகைலாயத்தில் 5 கோயில்களும் அமைந்துள்ளன. வைகுண்டத்தில் குருஸ்கோவில் ஏராளமான சுற்றுலாத்தலங்கள்  அமைந்துள்ளது. இதனால் பக்தர்கள் நெல்லை-திருச்செந்தூர் பயணிகள் ரயிலை பயன்படுத்தி வந்தனர். கொரோனா அச்சுறுத்தலால் 10 மாதமாக இந்த பயணிகள் ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2 மாதமாக செந்தூர் எக்ஸ்பிரஸ் மட்டும் இயக்கப்படுகிறது. எனவே நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு இயக்கப்பட்ட பயணிகள் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என்று பக்தர்கள், பொதுமக்கள், சுற்றுலாப்பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Nellai ,Thiruchendur ,
× RELATED நெல்லை மக்களவை தொகுதி பாஜ, அதிமுக வேட்பாளர்கள் சொத்து பட்டியல்