×

நெல்லையில் 11 மாதங்களுக்கு பிறகு கொரோனா தொற்று பரவல் இல்லை சுகாதார துறையினர் ஆறுதல்

நெல்லை, பிப். 2: நெல்லை மாவட்டத்தில் கடந்த மார்ச் மாத இறுதியில் இருந்து கொரோனா வைரஸ் பரவல் நீடித்து வருகிறது. துபாயில் இருந்து நெல்லைக்கு திரும்பிய வாலிபருக்கு, முதலில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவரே மாவட்டத்தில் கொரோனா பாதித்து முதல் நபராவார். தொடர்ந்து டெல்லியில் இருந்து திரும்பிய சிலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. பின்னர் படிப்படியாக கொரோனா பரவல் வேகம் எடுத்தது. மும்பையில் இருந்து நெல்லை மாவட்டத்தை பூர்விகமாக கொண்ட பலர் சொந்த ஊர்களுக்கு  கொரோனாவுடன் திரும்பினர். தொடர்ந்து நாள் தவறாமல் மாவட்டத்தில் கொரோனா கண்டறியப்பட்டதுடன் மே, ஜூன் மாதங்களில் இந்த பரவல் உச்சத்தை தொட்டது. நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 600 முதல் 800க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டனர். இதனால் அரசு மற்றும் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் அங்கீகாரம் பெற்ற தனியார் மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தன. தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் பெற்றாலும் நோயாளிகள் இடம்பிடிக்க சிபாரிசு செய்யும் நிலை ஏற்பட்டது. அதேவேளை கொரோனாவுக்கு உயிரிழப்புகளும் அதிகரித்தன.

அதன் பின்னர் கொரோனா பரவல் வேகம் ஏற்ற இறக்கமாக இருந்தது. இந்நிலையில் செப்டம்பர் 2ம் வாரத்திற்கு பின்னர் தொடங்கி தற்போது வரை கொரோனா வைரஸ் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த ஒரு மாதத்திற்கு மேல் நெல்லை மாவட்டத்தில் பெரும்பாலான நாட்களில் ஒற்றை இலக்க எண்ணிக்கையிலேயே புதிதாக பாதிக்கப்படுபவர்கள் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை வெளியான பட்டியலின் படி மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று முன்தினம் 191 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் யாருக்கும் பரவல் இல்லை என தெரியவந்தது. தனியார் ஆய்வகங்களில் நேற்று முன்தினம் யாரும் பரிசோதனைக்கு செல்லவில்லை. 11 மாதங்களுக்கு பின்னர் கொரோனா பரவல் ரிப்போர்ட்டில் யாருக்கும் பரவல் இல்லை என ரிசல்ட் வந்துள்ளதால் சுகாதாரத்துறையினர், மருத்துவர்கள் ஆறுதல் அடைந்துள்ளனர். மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி 64 பேர் மட்டுமே கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்

Tags : health department ,Nellai ,
× RELATED அரசு மருத்துவமனைகளில் ஓஆர்எஸ் கரைசல்...