மதுரையில் 10 மாதங்களுக்கு பின் புதிய கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது மக்கள் குறைதீர் முகாம் * அடிப்படை வசதி அவுட்

மதுரை, பிப். 2:  மதுரை மாவட்டத்தில் 10 மாதங்களுக்கு பின் மக்கள் குறைதீர் முகாம் நேற்று நடந்தது. புதிய அலுவலகத்தில் போதிய வசதி இன்றி இருந்ததால், பொதுமக்கள், முதியோர் அவதிப்பட்டனர். கொரோனா தொற்றினை தொடர்ந்து 10 மாதங்களுக்கு பின், மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் முகாம் நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்கள் அளித்தனர். கொரோனா பரவல் காரணமாக கடந்தாண்டு மார்ச் 25ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் கடந்த 10 மாதங்களாக மக்கள் குறைதீர் முகாம்கள் நடத்தப்படவில்லை. இந்நிலையில் கொரோனா தளர்வுகளுடன், சமூக இடைவெளி மற்றும் உரிய பாதுகாப்புடன் மக்கள் குறைதீர் முகாம் நடத்தலாம் என தமிழக அரசு அறிவித்தது.

இதன்படி மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நேற்று மக்கள் குறைதீர் முகாம் நடந்தது. முன்னதாக, முகாமில் பங்கேற்று மனு அளிக்க வந்தவர்கள், பழைய கலெக்டர் அலுவலக கட்டிடத்தில் தங்களது பெயரை ஆன்லைனில் பதிவு செய்தனர். பின்னர் புதிதாக கட்டப்பட்ட கூடுதல் அலுவலக கட்டிடத்தில் கலெக்டர் அன்பழகனிடம் மனுக்களை அளித்தனர். பழைய அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டு கூடம் பூட்டி சீல் வைக்கப்பட்டதால், வேறு இடமின்றி, புதிய அலுவலகத்தில் கூட்ட அரங்கை மட்டும் பயன்படுத்தினர்.

இந்த கூடுதல் கட்டிடத்தின் கட்டுமான பணி இன்னும் முழுமையாக முடியவில்லை. கட்டிடம் திறந்து இரண்டு மாதமாகியும் இது அலுவலக பயன்பாட்டிற்கு இன்னும் ஒப்படைக்கப்படவில்லை. இதனால், கூட்ட அரங்கில் உள்ள சுவரில் தூசி படிந்து இருந்தது. அவசர கோலத்தில் ஒரு மைக் செட் மட்டும் தயார் செய்யப்பட்டு இணைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. முகாமை துவக்கி வைத்து கலெக்டர் பேசும்போது, ‘‘முதல்வர் செல்லில் இருந்து வரும் மனுக்கள் ஆன்லைனில் அந்தந்த துறை அலுவலகத்திற்கு வரும். அதன் மீது உரிய காலத்தில் நடவடிக்கை எடுத்து, அதற்கு அதிகாரிகள் பதில் அளிக்க வேண்டும். 15 நாட்களுக்கு மேல் ஆனால், பதில் கிடைக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மனுக்கள் தள்ளுபடி செய்யபப்பட்டால், என்ன காரணத்திற்காக என்ற விபரத்தையும் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் கவனத்துடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

இதற்கிடையே புதிய கூட்ட அரங்கில் மனுதாரர்கள் அமர இருக்கை வசதி இல்லை. இதனால் மனு அளிக்க வந்த முதியவர்கள் உள்ளிட்டோர் சிரமத்துடன் தரையில் அமர்ந்திருந்தனர். முகாமில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் அமர்நாத் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>