10 மாதங்களுக்கு பின் மக்கள் குறைதீர் கூட்டம்

திருச்சி, பிப்.2: கொரோனாவால் நிறுத்தி வைக்கப்பட்ட மக்கள் குறைதீர் கூட்டம் 10 மாதங்களுக்கு பின் நேரடியாக மக்கள் குறைதீர் கூட்டம் திருச்சி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது.

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அரசு படிப்படியாக பல்வேறு தளர்வுகளை செய்துள்ளது. இந்நிலையில் கொரோனா காரணமாக கலெக்டர் அலுவலகங்களில் மக்கள் குறைதீர் கூட்டங்கள், விவசாயிகள் குறைதீர் கூட்டங்கள் போன்ற கூட்டங்கள் நடத்த தடைவிதிக்கப்பட்டது. இதனால் மக்கள் கலெக்டர் அலுவலகங்கள் முன் வைக்கப்பட்டிருந்த பெட்டியில் மனுக்களை போட்டு சென்றனர். மேலும் வாட்ஸ்அப் மூலமாகவும் கோரிக்கை மனுக்களை அனுப்பி வந்தனர். இதேபோல் விவசாயிகள் குறைதீர் கூட்டம் காணொலி காட்சி மூலம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஊரடங்கை நீடித்துள்ள தமிழக அரசு கலெக்டர் அலுவலகங்களில் குறைதீர் கூட்டங்கள் நடத்தலாம் என தளர்வு அளித்துள்ளது. அதன்படி அனைத்து கலெக்டர் அலுவலகங்களிலும் மக்கள் குறைதீர் கூட்டம் நேரடியாக நேற்று நடந்தது.

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள குறைதீர் கூட்ட மன்றத்தில் கலெக்டர் சிவராசு தலைமையில் குறைதீர் கூட்டம் நடந்தது. முன்னதாக கோரிக்கை மனுக்கள் அளிக்க வந்தவர்களுக்கு நுழைவு வாயிலில் சானிடைசர், மாஸ்க் அளிக்கப்பட்டது. பின்னர் மக்கள் மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர். அப்போது கலெக்டர் சிவராசு பேசுகையில், ‘கொரோனா முடிந்துவிட்டதாக யாரும் நினைக்க வேண்டாம். தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து வருகிறது. தடுப்பூசி வந்துவிட்டது. இதன்காரணமாக கொரோனா தற்போது குறைந்து வருகிறது. ஆனாலும் மக்கள் பாதுகாப்புடனும், முன்னெச்சரிக்கையுடனும் முககவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது என அரசின் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்’ என்றார்.இந்நிலையில், பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரங்கம் பேரூர் அக்ரகாரம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் கருப்பண்ணன். இவரது மனைவி தேன்மொழி. இருவரும் மண்ணெண்ணெய் பாட்டிலுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தனர். நுழைவு வாயிலில் அவர் மண்ணெண்ணையை தனது மீது ஊற்ற முயன்றார். இதைபார்த்த போலீசார் அவரை மீட்டு மண்ணெண்ணெய் பாட்டிலை பறித்தனர். விசாரணையில், தேன்மொழி கூறுகையில், ‘1996ல் அரசு சார்பில் எனக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டு மனைபட்டா இடத்தில் கூரை வீடு கட்டி வாழ்ந்து வருகிறேன். கடந்த 2008ல் மகள் திருமணத்துக்காக இதே பகுதியை சேர்ந்த ஜோதிவேல் மனைவி கஸ்தூரி என்பவரிடம் பட்டாவை அடகு வைத்து ரூ.15 ஆயிரம் கடன் வாங்கினேன். தற்போது அந்த இடத்தை கஸ்தூரி அபகரிக்க முயற்சித்து வருவதுடன் மிரட்டுகிறார். பட்டாவை மீட்டு தரவேண்டும்’ என்றார்.

தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். கடந்த வாரம் இந்த இடப்பிரச்னை தொடர்பாக பார்வையற்ற மாற்றுத்திறனாளியான கஸ்தூரி என்பவர் தனது 3மகள்கள் மற்றும் உறவினர் ரேவதியுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>