×

ஏல நிறுவனமாக மாறிய மத்திய அரசு தமிழகத்திற்கு எந்த ஆக்கப்பூர்வ அறிவிப்பும் பட்ஜெட்டில் இல்லை

மதுரை, பிப்.2: மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு ஆக்கபூர்வமான அறிவிப்புகள் இல்லையென பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
நடப்பு ஆண்டிற்கான பொது பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். அரசு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு அறிவிப்பாகவே இந்த பட்ஜெட் உள்ளதாக பெரும்பாலானோர் தெரிவித்தனர் எஸ்டிபிஐ கட்சி மாநிலத்தலைவர் நெல்லை முபாரக்: மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களை விற்று, லாபம் பார்ப்பதில் அதிக ஆர்வம் காட்டுகிறது. மோடி ஆட்சியில் அரசு நிர்வாகம் வெறும் ஏலம் விடும் நிறுவனமாக மட்டுமே மாறிவிட்டது. 5 மாநில தேர்தலை மனதில் கொண்டு தயாரிக்கப்பட்ட பட்ஜெட் என்பதாக சொல்லப்பட்டாலும், அதிலும் கூட தமிழகத்திற்கு எந்த ஆக்கப்பூர்வமான அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

எஸ்ஆர்எம்யூ  ரயில்வே சங்க உதவி கோட்ட செயலாளர் ராம்குமார்: தனியார்மயத்தை  ஊக்குவிப்பதுடன் தொழிலாளர் விரோதமாக பட்ஜெட்டாக உள்ளது. வரும் காலத்தில் எல்ஐசி நிறுவனம் இல்லாமல்  போய்விடும். புதிதாக போடப்பட்டுள்ள அக்ரோ வரியினால் விலைவாசி உயரும். ஆனால்  அந்த பணம் விவசாயிகளுக்குப் போய்ச் சேரும் என்பதற்கு எந்த உத்தரவாதமும்  இல்லை.

மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் டிஏ வழங்குவது குறித்து எந்த  அறிவிப்பும் இல்லை. டிஆர்இயூ ரயில்வே சங்க  கோட்ட செயலாளர் சங்கரநாராயணன்: வருமானவரி  செலுத்துவோருக்கு எந்த சலுகையும் இல்லை. மத்திய அரசு ஊழியர்களின்  முடக்கப்பட்ட பஞ்சப்படியை திரும்ப வழங்குவதற்கான அறிவிப்பும் இல்லை. ரயில்வேயில் உள்ள லட்சக்கணக்கான காலியிடங்களை பூர்த்தி செய்வதற்கான அறிவிப்பு  இல்லை. கொரோனா காலத்தில் பணிசெய்து மரணமடைந்த ரயில்வே ஊழியர்களின்  குடும்பத்திற்கு சிறப்பு நஷ்ட ஈடு பற்றிய அறிவிப்பும் இல்லை. பொதுத்துறைகளை  தனியாருக்கு தாரைவார்ப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.

கப்பலூர் தொழில் அதிபர்கள் சங்க தலைவர் ரகுநாதராஜா: ஏற்கனவே இருக்கும் ஜவுளிபூங்காக்களை இயக்க நடவடிக்கை வேண்டும். மத்திய அரசின் பட்ஜெட்டில் மதுரை கொல்லம் சாலையை மேம்படுத்தப்படும் என அறிவித்துள்ளனர். இது வரவேற்கத்தக்க அம்சம். இதன் மூலமாக திருமங்கலம் நகரம் மேலும் வளர்ச்சியடையும். ஜவுளிபூங்காக்கள் நாடு முழுவதும் 7 இடங்களில் அமைக்கப்படும் என அறிவித்துள்ளனர். மதுரையில் ஏற்கனவே தனியார் ஜவுளிபூங்கா அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் முழுமையாக இயங்கவில்லை. இது போல் நாட்டில் பல்வேறு பகுதிகளில் ஜவுளிபூங்காக்கள் ஏற்கனவேயுள்ளன. இவற்றை முதலில் இயக்கினாலே போதுமானதாகும்.சிறுகுறு தொழிலுக்கு முதலீடு 10 கோடிக்கு கீழ் இருக்கவேண்டும் என்பது வரவேற்கத்தக்கது.  திருமங்கலம் மதிமுக நகர செயலாளர் அனிதாபால்ராஜ்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் எந்த வளர்ச்சிதிட்டமும் இல்லை. கொரோனா காலத்தில் அனைத்து தொழில்களும் நலிவுற்றுள்ளன. அவற்றை மீட்க எந்தவித நடவடிக்கையும் இல்லை.
 மதுரை - கொல்லம் சாலை குறித்து பல பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படும் என கூறியுள்ளனர். ஆனால் திட்டம் செயல்படுத்தவில்லை.

Tags : announcement ,Tamil Nadu ,Central Government ,auction house ,
× RELATED தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும்...