நாய்கள் தொல்லை அதிகரிப்பு பொதுமக்கள் அவதி

தஞ்சை,பிப்.2: தஞ்சை பள்ளியக்கிரஹாரத்தில் நாய்கள் தொல்லை அதிகரிப்பால் பொது மக்கள், வாகன ஒட்டிகள் அவதிப்படுகின்றனர். தஞ்சை பள்ளியக்கிரஹாரத்தில் சுமார் 1000 க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள பெரும்பாலானோர் தங்களது பணிக்காகவும், பொருட்களை வாங்குவதற்கும் தஞ்சைக்கு அல்லது கடைத்தெருவிற்கு வரவேண்டும். ஆனால் பள்ளியக்கிரஹாரத்தில் கடந்த சில வாரங்களாக நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. குறைந்தளவில் இருந்த நாய்கள், தற்போது அளவுக்கு அதிகமாக பெருகி விட்டதால், சாலையில் நடந்து செல்பவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மீது பாய்கிறது. இதனால் அவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி விடுகிறார்கள். இதே போல் அங்கு, கடந்த சில நாட்களுக்கு முன் குடும்பத்துடன் பைக்கில் வந்தவர், நாய்கள் ஒன்றோடு ஒன்று சண்டை போட்டு கொண்டு, அவரது பைக் முன் விழுந்தது. இதில் நிலை தடுமாறிய அவர், குடும்பத்துடன் கீழே விழுந்து பலத்த காயத்துடன் உயிர் தப்பினார்.

மேலும் இரவு நேரங்களில் பாதசாரிகள், வாகனத்தில் செல்பவர்களை விரட்டுவதால், அவர்கள், பயந்து ஓடும் போது, நிலை தடுமாறி கீழே விழுந்து விடுகிறார்கள். இதனால் பள்ளியக்கிரஹாரம் பகுதிக்குள் இரவுநேரங்களில் வாகன ஓட்டிகள் வருவதற்கே அச்சப்பட்டுள்ளனர். மேலும் இரவு நேரங்களில், நாய்கள் தெருக்கள், சாலைகளில் படுத்திருப்பதால், நாய் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள், நாய் மேல் ஏற்றி விடுகிறார்கள். பின்னர் வாகன ஓட்டி பயந்து கீழே விழுந்த போது, நாய் அவரை கடித்து விடுகிறது. இது போன்ற அபாய நிலை தினந்தோறும் நடப்பது வேதனையான விஷயமாகும். இது குறித்து அப்பகுதிவாசிகள் , மாநகராட்சி அலுவலர்களிடம் புகார் தெரிவித்தும், எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியப்படுத்தி வருகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் பள்ளியக்கிரஹாரம் பகுதியில் அளவுக்கதிகமாக சுற்றி திரியும் நாய்களை பிடித்து, பொது மக்களை காப்பாற்ற வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>