கொள்முதல் பணியாளர்களுக்கு ரூ.20ஆயிரம் ஊதியம் வழங்க கோரி ஏஐடியூசி தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தஞ்சை, பிப்.2: கொள்முதல் பணியாளர்களுக்கு குறைந்தபட்சம் மாதம் ரூ.20 ஆயிரம் வழங்க கோரி ஏஐடியூசி தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தஞ்சை டிஎன்சிஎஸ்சி மண்டல அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஏஐடியூசி தொழிலாளர் சங்கம் மற்றும் சுமைதூக்கும் தொழிலாளர் சங்கத்தினர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். அதிக அளவில் நெல் விற்பனைக்கு வந்துள்ள நிலையில் கொள்முதலுக்கான முன்னேற்பாடுகளை விரிவான முறையில் செய்ய வேண்டும். கொள்முதல் அலுவலருக்கு பொறுப்புகளை நிர்ணயிக்க வேண்டும். கொள்முதலுக்கான தளவாட சாமான்கள் சாக்கு, சணலுடன் கொள்முதல் அலுவலர் பொறுப்பில் அனுப்ப வேண்டும். கொள்முதல் பணியாளர்களுக்கு குறைந்தபட்சம் மாதம் ரூ.20 ஆயிரம் நிர்ணயித்து வழங்க வேண்டும். சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு எடை கூலி மற்றும் ஏற்றுக் கூலி தனியாருக்கு இணையாக மூட்டைக்கு ரூ.15 வழங்க வேண்டும். சுமைதூக்கும் தொழிலாளர்களின் கூலி விவரங்களை கையடக்க கருவியில் பதிவு செய்து மாதம் 5ம் தேதிக்குள் கூலி வழங்க வேண்டும்.

12(3) ஒப்பந்தத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பதை நிர்வாகம் கைவிட வேண்டும். கொள்முதல் நிலையங்களில் லாரி டிரைவர்கள் மாமூல் என்ற பெயரில் ஆயிரக்கணக்கில் லஞ்சம் கொடுக்க வற்புறுத்துவதை தடுக்க வேண்டும். தலைமை அலுவலக சுற்றறிக்கையின்படி பணிக்கொடை வழக்குகளை திரும்ப பெற்று உடன் தொகை வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் ஏஐடியூசி மாநில பொதுச் செயலாளர் சந்திரகுமார், சுமைதூக்கும் தொழிலாளர் சங்கம் மாநில பொதுச் செயலாளர் புண்ணீஸ்வரன், மாநில தலைவர் சாமிக்கண்ணு, மாநில பொருளாளர் கோவிந்தராஜன், ஏஐடியூசி மாவட்ட செயலாளர் தில்லைவனம், வங்கி ஊழியர் சங்கம் மாவட்ட செயலாளர் அன்பழகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: