×

ஜல்ஜீவன் திட்டத்தில் குடிநீர் இணைப்புக்கு பணம் கேட்கும் ஊராட்சி நிர்வாகம்

திருப்பூர், பிப்.2:திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. வருவாய் அலுவலர் சரவணமூர்த்தி தலைமை வகித்தார். இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்தனர். திருப்பூர், உடுமலை ஒன்றிய பா.ஜ. பொறுப்பாளர் மாரியப்பன் தலைமையில் நிர்வாகிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குருவப்பநாயக்கனூர் கிராமத்தில் ஜல்ஜீவன் திட்டத்துக்காக 377 குடிநீர் இணைப்புகள் ஒதுக்கப்பட்டன. இதில், முதல்கட்டமாக, 79 பேருக்கு இணைப்பு வழங்கப்பட்டது. ரூ.14 லட்சத்து 7 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஜல்ஜீவன் திட்டத்துக்காக, வழங்கப்பட வேண்டிய இணைப்புகளில் எவ்வித பணமும் பெறாமல் வழங்க வேண்டும் என நிபந்தனை உள்ளது.

ஆனால், எங்கள் ஊராட்சியில் பணம் பெறப்படுகிறது. இதனை தடுத்து நிறுத்துவதுடன், எங்களிடம் உள்ள வீடியோ ஆதாரத்தை பெற்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறி உள்ளனர். தமிழக சட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் சார்பில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் சாளரப்பட்டி கிராமத்தில் வசிக்கும் சில விவசாயிகள் குறிப்பிட்ட ரகத்தை சேர்ந்த மக்காள்சோளத்தை பயிரிட்டனர். இவர்கள் பயிரிட்ட மக்காச் சோளமானது முளைப்பு திறன் 25 சதவீதம் இல்லை. மேலும், மற்ற மக்காச்சோளங்களுடன் ஒப்பிடுகையில் 50 சதவீதம் வளர்ச்சி விகிதம் குறைந்து காணப்பட்டது.
 
இதற்கு தேவையான நுண்ணூட்டம் மற்றும் தண்ணீர் அனைத்தும் சரியான அளவில் கொடுக்கப்பட்டது. இருப்பினும், போதிய முளைப்பு இல்லை. எனவே, இதை ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விதை நிறுவனத்திடம் இருந்து நஷ்டஈடு வழங்க வேண்டும் என கூறி உள்ளனர்.
திருப்பூர், பெருந்தொழுவு அடுத்த அத்திக்குட்டை தோட்டம் பகுதியை சேர்ந்த மணிவண்ணன் (49) அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: அத்திக்குட்டை பகுதியில் எங்களுக்கு சொந்தமான உள்ள 6.10 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்தோம். ஒரு பிரச்னை காரணமாக கடந்த 2001ம் ஆண்டு எனது நண்பர் மகேஸ்வரன் அறிவுரையின் படி சண்முகம் என்பவருக்கு பவர் கொடுத்தேன். அந்த நிலத்தை வேல்முருகன் என்பவருக்கு கடந்த 2017ம் ஆண்டு விற்பனை செய்துவிட்டனர். இதுகுறித்து, நான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன்.

ஆனால், தற்போது வேல்முருகன் எங்களை இடத்தை காலி செய்ய சொல்லி அடியாட்களை வைத்து மிரட்டி வருகிறார். இதுகுறித்து, அவினாசிபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என கூறி உள்ளார். திருப்பூர், புதிய பஸ்நிலையம் பகுதியை சேர்ந்த ராஜா (35), விமலா (33) தம்பதி அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: நான் பனியன் நிறுவனத்தில் பிரிண்டிங் வேலை செய்து வருகிறேன். எனக்கு வீரலட்சுமி (11) என்ற மகளும், சபரீநாதன் (6) என்ற மாற்றுத்திறனாளி மகனும் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எங்களுக்கு வழங்கிய குடும்ப அட்டையில் குளறுபடி ஏற்பட்டு விஐபி குடும்ப அட்டை வழங்கப்பட்டது. இதனால், நாங்கள் குடும்ப அட்டை பயன்படுத்தி அரிசி, சர்க்கரை உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் எதுவும் வாங்க முடியாமல் சிரம்படுகிறோம்.

மேலும், அரசு வழங்கும் எந்த நலத்திட்டங்களும் கிடைப்பதில்லை. இதுகுறித்து, வடக்கு தாலுகா அலுவலகம் சென்று விசாரித்தால் சரியான பதில் இல்லை. எனவே, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி உள்ளனர். திருப்பூர், அலகுமலை அடுத்த செட்டிபாளையம் பகுதி பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் பகுதியில் பகுதி நேர ரேஷன் கடை தனியார் கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இதுகுறித்து, பல்லடம் எம்.எல்.ஏ நடராஜனிடம் அரசு கட்டிடம் வேண்டும் என மனு அளித்தோம். பின்னர், அவர் நிதியில் கட்டிடம் கட்டும் பணி துவங்கியது. ஆனால், அலகுமலை ஊராட்சி தலைவர் கலெக்டரிடம் மனு அளித்து கட்டிடம் கட்டும் பணி கிடப்பில் உள்ளது. ஆகையால், எங்கள் பகுதியில் உள்ள மக்களை நன்றாக விசாரித்து கட்டிடம் கட்ட துவங்குவதற்கு உத்தரவு வழங்க வேண்டும் என கூறி உள்ளனர்.

திருப்பூர், குளத்துப்புதூர் பகுதி வாலிபர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மங்கலம் ரோடு குளத்துப்புதூர் அருகில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை செயல்படும் பள்ளி உள்ளது. இதில், சுமார் 200 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். பள்ளியின் காம்பவுண்ட் அருகில் பெரிய டிரான்ஸ்பார்மர் உள்ளது. இதன் அருகில் ஏராளமான மரங்களும் உள்ளது. ஆகையால், எந்த நேரத்தில் வேண்டுமானலும் மின்விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, டிரான்ஸ்பார்மரை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். மேலும், பள்ளியின் அருகில் குப்பையை கொட்டி இருப்பதால் மாணவர்கள் சுகாதார சீர்கேட்டில் சிக்கி தவிக்கின்றனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி உள்ளனர்.  திருப்பூர், இடுவம்பாளையம் அரசுமேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் அளித்த மனுவில், நாங்கள் கடந்த 2017-18ம் பள்ளி படிப்பை முடித்துவிட்டோம். ஆனால், இதுவரை அரசின் இலவச லேப்டாப் வழங்கப்படவில்லை. நாங்கள் மேல்படிப்பை தொடர லேப்டாப் அவசியமாக உள்ளது. எனவே, விரைந்து லேப்டாப் வழங்க வேண்டும் என்றனர்.

Tags : Panchayat administration ,
× RELATED திண்டுக்கல் சீலப்பாடியில் கழிவுநீர் கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றம்