×

சாக்கடை வசதி செய்து தரக்கோரி மக்கள் மனு

திருப்பூர், பிப்.2: சாக்கடை கால்வாய் வசதி செய்து தரக்கோரி பாண்டியன் நகர் பகுதி மக்கள் முதலாவது மண்டல அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர். திருப்பூர் மாநகராட்சி முதலாவது மண்டலத்திற்கு உட்பட்ட பாண்டியன் நகர் சஞ்சீவி நகரில் 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு சாக்கடை வசதி இல்லாததால் மழை காலங்களில் மழை நீருடன் கழிவு நீரும் கலந்து தெருக்களில் வழிந்தோடி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இந்நிலையில், தி.மு.க. மத்திய மாவட்ட, வடக்கு மாநகர இளைஞரணி அமைப்பாளர் முத்துக்குமார் தலைமையில், மாநகர அவைத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி, நெருப்பெரிச்சல் பகுதி செயலாளர் ஜோதி, 3வது வார்டு செயலாளர் மகேந்திரன், வடக்கு மாநகர் இளைஞரணி துணை அமைப்பாளர் பிரகதீஸ்வரன் மற்றும் பொதுமக்கள் என 50க்கும் மேற்பட்டோர் நேற்று அனுப்பர்பாளையத்தில் உள்ள முதலாவது மண்டல அலுவலகத்திற்கு வந்து அதிகாரிகளிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.

அம்மனுவில், எங்கள் வீதியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சாக்கடை கழிவுநீர் ரோட்டில் வழிந்தோடி வருகிறது. இதனால், வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மழைக் காலங்களில் குழந்தைகள், வயதானவர்கள் நடந்து ெசல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். சில சமயங்களில் விபத்தும் ஏற்படுகிறது. ஆகவே, தாங்கள் சாக்கடை கால்வாய் வசதி ஏற்படுத்தித்தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி உள்ளனர்.

Tags : sewerage facility ,
× RELATED கால்வாய்கள் தூர்வாராததாலும், பாதாளச்...