×

வேளாண் விளைநிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்

பெரம்பலூர்,பிப்.2: உடை ந்த ஏரியால் சேதமடைந்த வேளாண் விளை நிலங்களுக்கு உரிய இழப்பீட்டு தொகை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசலூர் கிராம மக்கள், விவசாயிகள் பெரம்பலூர் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர். பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று பொதுமக்கள் குறைதீர்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் (பொ) ராஜேந்திரன் தலைமை வகித்தார். கூட்டத்தில், அன்னமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட அரசலூர் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் திரண்டு வந்து அளித்துள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது :பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, அன்னமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட அரசலூர் கிராமத்தில், பச்சைமலை அடிவாரத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. இந்த ஏரி 140 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். ஆனால் தற்போது 40 ஏக்கர் அளவில்கூட தண்ணீர் தேங்கவில்லை. இந்த ஏரியா தனியார் நபர்கள் பலரின் ஆக்கிரமிப்பில் உள்ளது. இதனால் விவசாயத்திற்கு தேவையான நீராதாரங்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏரியின் பரப்பளவு பெருமளவு குறைந்து போனதால், சுமார் 10 ஆண்டுகளுக்கு பின் சமீபத்தில் பெய்த மழையால், முழு அளவுக்கு தண்ணீர் தேங்கியது.

இருந்தும் ஏரியின் கரை பழுதாகி உடைந்து போனதால், உள்ளிருந்த தண்ணீர் முழுவதும் வீணாகி போனது. எனவே ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை முற்றிலும் அகற்றிவிட்டு, ஏரியின் முழு கொள்ளளவு நிரம்பும் வகையில் தண்ணீரை தேக்குவதற்கு ஏற்றதாக ஆழப்படுத்தித் தரவேண்டும். ஏரி உடைப் பில் அடித்து வரப்பட்ட மண்ணால் மூடி, பாதிக்கப்பட்ட வேளாண் விளை நிலங்களுக்குத் தனியாகவும், பாதித்த பயிர்களுக்குத் தனியாகவும் உரிய இழப்பீ ட்டுத் தொகையினை வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தக் கோரிக்கை மனு வில் தெரிவித்துள்ளனர். அவர்களிடம் மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட (பொ) கலெக்டர் ராஜேந்திரன் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags : lands ,
× RELATED கும்பகோணம் அருகே ஒப்பிலியப்பன்...