×

சாலைகளை சீரமைக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூ., காத்திருப்பு போராட்டம்

திருப்பூர், பிப்.2: திருப்பூர் மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டம், நான்காவது குடிநீர் திட்டம், பாதாளச் சாக்கடை திட்டம் என பல்வேறு பணிகளை நடந்து வருவதால் ஆங்காங்கே சாலைகள் தோண்டப்பட்டுள்ளன. ஆனால் பணிகள்  முடித்த பகுதியில் சாலைகள் சீரமைக்கப்படவில்லை. நகரில் பெரும்பாலான பகுதிகளில் சாலைகள் பழுதடைந்தும், குண்டும், குழியுமாகயும் காட்சியளிக்கிறது. இதனால், அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே, திருப்பூரில் தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் மாநகர சாலைகள், வீதிகள் உள்பட அனைத்து சாலைகளையும் முழுமையாகச் சீரமைக்க வலியுறுத்தி நேற்று குமரன் ரோட்டில் உள்ள நெடுஞ்சாலைத் துறை உதவிக் கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூ., தெற்கு மாநகரச் செயலாளர் ஜெயபால் தலைமையில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

இதில், கலந்து கொண்ட வாலிபர்கள் சிலர் கைகளிலும், தலையிலும் காயம் அடைந்ததாக கட்டுப் போட்டு அமர்ந்திருந்தனர். கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் காமராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் உண்ணிகிருஷ்ணன் போராட்டத்தை விளக்கிப் பேசினர். அதன்பின், நெடுஞ்சாலைத் துறை உதவிக் கோட்டப் பொறியாளர் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆகியோரை சந்தித்து மாவட்டச் செயலாளர் முத்துக்கண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜகோபால் கோரிக்கை மனு அளித்தனர்.  இதில், 15 நாட்களில் நெடுஞ்சாலை மற்றும் மாநகராட்சி சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.

Tags : roads ,
× RELATED சாலை விரிவாக்க பணிக்காக மரங்கள்...