×

மத்திய அரசின் கலவை மருத்துவத்துக்கு எதிர்ப்பு டாக்டர்கள் உண்ணாவிரதம்

கோவை, பிப். 2:  மத்திய அரசின் கலவை மருத்துவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் டாக்டர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
மத்திய அரசின் கலவை மருத்துவ திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவை இந்திய மருத்துவர் சங்கம் (ஐ.எம்.ஏ.) சார்பில், கோவை சிரியன் சர்ச் ரோட்டில் உள்ள அதன் வளாகத்தில் நேற்று உண்ணாவிரதம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில செயலாளர் டாக்டர் ஏ.கே.ரவிக்குமார் கோரிக்கையை வலியுறுத்தி பேசினார். இதில், 100க்கும் மேற்பட்ட டாக்டர்கள் பங்கேற்றனர். இது பற்றி இந்திய மருத்துவர் சங்க கோவை கிளைத தலைவர் டாக்டர் ராஜேஷ்பாபு கூறியதாவது: கலவை மருத்துவம் (மிக்சோபதி) மூலம், ஆயுர்வேதம், சித்த மருத்துவம் படித்தவர்கள் 58 வகையான அறுவை சிகிச்சை செய்யலாம் என மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

‘‘ஒரே நாடு, ஒரே மருத்துவம்’’ என்ற திட்டத்தின் கீழ் கலவை மருத்துவம் திட்டம் வகுத்துள்ளனர். இவர்களுக்கு பயிற்சி மூலம் எம்.எஸ். பட்டம் கொடுக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்ய அனுமதிக்கப்படுகிறது. போதிய அனுபவம் இல்லாமல் அறுவை சிகிச்சை செய்தால் நோயாளிகளுக்கு பெரும் ஆபத்து ஏற்படும். அறுவை சிகிச்சைக்கு பின் ஏற்படும் ஒரு சில நோய் தொற்றுகளில் இருந்து நோயாளிகளை காக்க முடியாமல் போகும். போதிய அனுபவம் இல்லாத நபர்களால், நோயாளியின் உயிரை எப்படி காப்பாற்ற முடியும். எனவே, கலவை மருத்துவ திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். மிக்சோபதி மருத்துவத்தில் அறுவை சிகிச்சை செய்ய அனுமதிக்க அளிக்கக்கூடாது. இவ்வாறு டாக்டர் ராஜேஷ்பாபு கூறினார்.கோவை அரசு மருத்துவக்கல்லூரி மாணவி ஸ்ருதி அரவிந்த் கூறுகையில், ‘’மிக்சோபதி அறுவை சிகிச்சை மூலம் மக்களுக்கு முறையான வைத்தியம் அளிக்க முடியாது. நீட் தேர்வு எழுதி சிரமப்பட்டு எம்.பி.பி.எஸ். சீட் பெறும் இந்த சூழலில் எங்களைப்போன்ற மாணவ-மாணவிகளுக்கு இத்திட்டம் கடும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, கலவை மருத்துவ திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்’’ என்றார்.

Tags : Doctors ,hunger strike ,
× RELATED செவிலியர்களுக்கு தபால் வாக்கு: பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் கோரிக்கை