×

பஞ்சாலைகளை திறக்கக்கோரி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

கோவை, பிப். 2: பஞ்சாலைகளை திறக்கக்கோரி கோவையில் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் துவக்கினர். மத்திய அரசின் தேசிய பஞ்சாலை கழகத்திற்கு  (என்.டி.சி.) சொந்தமாக நாடு முழுவதும் 23 பஞ்சாலைகள் உள்ளன. தமிழகத்தில், கோவையில் 5 ஆலைகள், கமுதகுடி, காளையார்கோவில் ஆகிய இடங்களில் தலா ஒரு ஆலை என மொத்தம் 7 பஞ்சாலைகள்  இயங்கி வருகின்றன. இந்த ஆலைகளில் சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் என்.டி.சி. பஞ்சாலைகள் மூடப்பட்டன. தற்போது திரையரங்கம் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் திறக்கப்பட்டுவிட்ட நிலையில், என்.டி.சி. பஞ்சாலைகள் மட்டும் திறக்கப்படவில்லை.

கிட்டத்தட்ட 300 நாட்கள் கடந்துவிட்ட நிலையில், என்.டி.சி. நிர்வாகம், பஞ்சாலை அதிகாரிகளுக்கு முழு சம்பளம் கொடுத்துவிட்டு, தொழிலாளர்களுக்கு மட்டும் பாதி சம்பளம் கொடுக்கிறது. அதுவும், இழுபறியில் உள்ளது. எனவே, என்.டி.சி. பஞ்சாலைகள் அனைத்தையும்  திறந்து, முழுமையாக இயக்கவேண்டும், முழு ஊதியம் வழங்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், என்.டி.சி. நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. இக்கோரிக்கையை வலியுறுத்தி, கோவை புலியகுளத்தில் உள்ள பங்கஜா ஆலைக்கு சொந்தமான மைதானத்தில் தொழிலாளர்கள் நேற்று தொடர் காத்திருப்பு போராட்டத்தை துவக்கினர்.

இதில், 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றுள்ளனர். தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து எல்.பி.எப்., சி.ஐ.டி.யு. தொழிற்சங்க தலைவர்கள் உரையாற்றினர். இது குறித்து தொழிலாளர்கள் கூறுகையில், ‘‘300 நாட்கள் பஞ்சாலைகள் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அமைதியான முறையில்  போராட்டம் நடத்தி அரசின் கவனத்தை ஈர்த்தோம். ஆனால் பலனில்லை. அதனால், இப்போது ஆலைகளை இயக்கும் வரை காத்திருப்பு போராட்டம் துவக்கியுள்ளோம்’’ என்றனர்.

Tags :
× RELATED 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு