பெரணமல்லூர் அருகே பொதுமக்கள் எதிர்பார்ப்பு: கால்நடை சிகிச்சை மையம் அமைக்க வேண்டும்

பெரணமல்லூர், பிப்.2: பெரணமல்லூர் அருகே கால்நடை சிகிச்சை மையம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். பெரணமல்லூர் அடுத்த தவணி ஊராட்சியில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு பெரும்பாலான பொதுமக்கள் விவசாயம் செய்து வருகின்றனர். விவசாயத்திற்கு நன்மை பயக்கும் வகையில் பொதுமக்களில் பலர் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். இதில் கால்நடைகளுக்கு ஏதாவது உடல்நிலை பாதிக்கப்பட்டால், 9 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள மேலத்தாங்கல், கொழப்பலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு அழைத்து சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர். அவ்வாறு கால்நடைகளை சிகிச்சைக்காக நெடுந்தூரம் அழைத்து செல்வதால் ஏற்படும் சிரமங்களால் விவசாயிகள் பெருமளவு பாதிப்படைகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் சிலர் கூறுகையில், எங்கள் கிராமம் மற்ற பகுதிகளிலிருந்து உள்ளடங்கிய பகுதியாக உள்ளது. இதனால் இங்கு குறிப்பிடத்தக்க பஸ் வசதியும் கிடையாது. இங்கு வசிக்கும் பொதுமக்களில் பலர் விவசாயத்தை நம்பி வாழ்ந்து வருகிறோம். இதற்காக கால்நடைகளை வளர்த்து வருகிறோம்.

அவ்வாறு வளர்க்கப்படும் கால்நடைகளுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டால், நாங்கள் சிகிச்சைக்காக மேலத்தாங்கல் மற்றும் கொழப்பலூர் பகுதிகளுக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து வருகிறோம். நாங்கள் கால்நடைகளை நடந்தே நெடுந்தூரம் அழைத்து செல்வதால் எங்களுக்கும் உடல்நிலை பாதிப்பு ஏற்படுவதோடு கால்நடைகளுக்கும் பாதிப்பு உண்டாகிறது. இதுகுறித்து நாங்கள் சம்பந்தப்பட்ட துறையினருக்கு மனுக்கள் கொடுத்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. எனவே, விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு, எங்கள் கிராமத்தில் உடனடியாக கால்நடை சிகிச்சை மையம் அமைக்க வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories:

More