×

பாகிஸ்தான் ராணுவம் நடத்திய மெகா ஆபரேஷன்: 145 பலூச் போராளிகள் சுட்டுக்கொலை

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டில் பலுசிஸ்தானில் வரலாறு காணாத வன்முறை சம்பவங்கள் நடந்து வருகிறது. அங்கு பலூச் போராளிகள், பாகிஸ்தான் பாதுகாப்பு படை இடையே வன்முறை தாக்குதல்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதற்கிடையே சுமார் 40 மணி நேரம் நீடித்த மோதலில் பாகிஸ்தானில் சுமார் 145 பலூச் போராளிகள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு சில ஆண்டுகளாகவே பெரும் தலைவலியாக இருந்து வருவது பலூச் போராளிகள்தான். அதாவது பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பிராந்தியத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என இவர்கள் பல ஆண்டுகளாகவே கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ஆனால், அவர்கள் மீது பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

அதே நேரத்தில், தங்கள் கோரிக்கையை வலியுறுத்தும் வகையில் பாகிஸ்தான் ராணுவத்தை குறிவைத்து பலூச் போராளிகள் அவ்வப்போது தாக்குதல்களையும் நடத்தி வருகிறார்கள். அப்படித்தான் சமீபத்தில் பாகிஸ்தானில் பலூச் போராளிகள் தாக்குதல் நடத்தினர். இதற்கிடையே பலுசிஸ்தான் போராளிகளை ஒடுக்கும் நடவடிக்கைகளில் பாகிஸ்தான் ராணுவம் களம் இறங்கியுள்ளது. துப்பாக்கி மற்றும் குண்டு தாக்குதல்களை தொடர்ந்து, பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் பல பலூச் போராளிகளை சுட்டு கொன்றுள்ளனர். சுமார் 40 மணி நேரம் நீடித்த இந்த கொடூர சண்டையில் 145 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லைகளை ஒட்டி அமைந்துள்ள இந்த தென்மேற்கு மாகாணம், பல ஆண்டுகளாக இல்லாத மிக கொடூரமான வன்முறையை எதிர்கொண்டது. இங்கு பாதுகாப்பு படையினர் மற்றும் உள்கட்டமைப்புகளை குறிவைத்து கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். நேற்று முன்தினம் பலூச் உறுப்பினர்கள் பொதுமக்களை போலவே வேடமிட்டு மருத்துவமனைகள், பள்ளிகள், வங்கிகள் மற்றும் சந்தைகளுக்குள் நுழைந்து துப்பாக்கி சூடு நடத்தியதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் அமைச்சர் தலால் சவுத்ரி கூறுகையில், “கண்மூடித்தனமாக சாதாரண மக்களை தாக்கிவிட்டு, பொதுமக்களை மனித கேடயங்களாகவும் பயங்கரவாதிகள் பயன்படுத்தினர்” என்றார். பிரிவினைவாத குழுவான பலூச் விடுதலை ராணுவம் இந்த தாக்குதல்களுக்கு பொறுப்பேற்றது.

அதேநேரம் பாதுகாப்பு படையினரை குறிவைத்து மட்டுமே தாங்கள் தாக்குதல் நடத்தியதாக தெரிவித்தனர். மாகாணம் முழுவதும் பாதுகாப்பு படையினரை குறிவைத்து ‘ஹீரோஃப்’ அல்லது ‘கருப்பு புயல்’ என்ற பெயரில் ஒருங்கிணைந்த தாக்குதலை நடத்தியதாக அவர்கள் அறிவித்தனர். பலுசிஸ்தான் முதல்வர் சர்ப்ராஸ் புக்தி அளித்த தகவலின்படி, தாக்குதல்களில் 17 சட்ட அமலாக்க படையினரும், 31 பொதுமக்களும் உயிரிழந்தனர். இந்ச் சூழலில்தான் பலூச் போராளிகளை குறிவைத்து பாகிஸ்தான் மெகா ஆபரேஷனை தொடங்கியது. இந்த ஆபரேஷன் சுமார் 40 மணி நேரம் நீடித்துள்ளது. அதில்தான் சுமார் 145 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

Tags : Pakistan Army ,Islamabad ,Balochistan, Pakistan ,Pakistan… ,
× RELATED அதிகாலையில் பனிமூட்டம் அதிகரிக்கும்;...