×

ஒரே மருத்துவ முறையை கைவிடக்கோரி தனியார் மருத்துவர்கள் உண்ணாவிரதம்

ஈரோடு, பிப். 2: நாடு முழுவதும் ஒரே மருத்துவ முறையை மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி ஈரோட்டில் தனியார் மருத்துவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு பெருந்துறை ரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானா அருகே இந்திய மருத்துவ சங்கத்தின் (ஐ.எம்.ஏ.) சார்பில், தனியார் மருத்துவர்கள் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். ஐ.எம்.ஏ. மாவட்ட தலைவர் டாக்டர் பிரசாத் தலைமை தாங்கினார். செயலாளர் டாக்டர் செந்தில்வேலு முன்னிலை வகித்தார். இதில், சிறப்பு அழைப்பாளராக ஐ.எம்.ஏ. தேசிய துணை தலைவர் சி.என்.ராஜா கலந்து கொண்டார். ஒரே நாடு, ஒரே மருத்துவ முறையை கண்டித்தும், இதனை மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டம் வரும் 14ம் தேதி நடைபெறும் எனவும், மருத்துவர்களின் மருத்துவ சேவை பாதிக்காத வகையில், சிப்ட் முறையில் போராட்டத்தில் பங்கேற்றுள்ளதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

ஐ.எம்.ஏ. தேசிய துணை தலைவர் சி.என்.ராஜா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: மத்திய இந்திய மருத்துவ குழுமம் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஆயுர்வேதம் படித்த மருத்துவர்கள் கிட்டத்தட்ட 60 வகையான அலோபதி அறுவை சிகிச்சைகளை செய்யலாம் என அறிவிப்பு ஆணையினை வெளியிட்டு உள்ளது. 2030ம் ஆண்டுக்குள் ஒரே நாடு, ஒரே மருத்துவ முறை என்ற ஒரு அமைப்பை கொண்டு வருவதற்காக மத்திய அரசு முனைப்பு எடுத்திருக்கிறது. இது மக்களுடைய உயிரோடு, ஆரோக்கியத்தோடு, சுகாதாரத்தோடு, அவர்களின் வாழ்வோடு விளையாடுவதற்காக, பாதுகாப்பு இல்லாத ஒரு மருத்துவ முறையை கொண்டு வருவதற்கான முன்னெடுப்பு என கூறி இந்த தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளோம்.

நாடு முழுவதும் ஐ.எம்.ஏ.வின் 12 ஆயிரம் கிளைகளும், தமிழகத்தில் 160 கிளைகளும் பங்கேற்கிறது. தமிழகத்தில் மட்டுமே 38 ஆயிரம் மருத்துவர்கள் இருக்கிறார்கள். அரசு மருத்துவர்கள், பல் மருத்துவர்கள், செவிலியர்கள் சங்கத்தினரும் எங்களது போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்துள்ளனர். ஏனென்றால், நாடு முழுவதும் ஒரே சிகிச்சை முறை என்பது நடைமுறைக்கு ஒத்து வராத ஒன்றாகும். கண், காது, நுரையிரல், இருதயம் என ஒவ்வொரு உடல் உறுப்புகளுக்கும் தனித்தனியாக சிகிச்சை முறை உள்ளது. இந்திய மருத்துவர்கள் வெளிநாடுகளில் போற்றப்படுகிறார்கள். அந்தந்த துறையில் உள்ள மருத்துவர்கள் அதற்கான மருத்துவத்தை செய்ய வேண்டும். ஒரு துறையில் உள்ள மருத்துவர்கள் பிற துறை மருத்துவத்தை எடுத்து செல்லக்கூடாது என மக்களுக்கு விழிப்புணர்வு வேண்டும். தமிழக அரசு எங்களுடைய கோரிக்கையை ஆதரிப்பதாக சுகாதாரத்துறை செயலரும், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சரும் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இதேபோல நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநில அரசுகளும் தமிழகத்தின் முன்னோடி கொள்கையை கையில் எடுத்து முன்னெடுத்து செல்ல வேண்டும். மத்திய அரசு ஒரே மருத்துவ முறையை கைவிட வேண்டும். தேசிய செயலாளர் முன்னிலையில் 14ம் தேதி சென்னையில் கூட உள்ளோம். அதன் பிறகு அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து தெரிவிப்போம். இவ்வாறு அவர் கூறினார். இப்பேட்டியின்போது, ஐ.எம்.ஏ. மாநில துணை தலைவர் டாக்டர் மல்லிகா, டாக்டர் அபுல் ஹசன், பெண் மருத்துவர்கள் தலைவர் டாக்டர் சித்ரா, ஈரோடு ஐ.எம்.ஏ. நிதி செயலாளர் டாக்டர் சுதாகர், துணை தலைவர் விஜயகுமார் தம்பிராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : doctors ,
× RELATED செவிலியர்களுக்கு தபால் வாக்கு: பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் கோரிக்கை