10 மாதங்களுக்கு பிறகு குறைதீர்வு கூட்டம் கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் திடீர் போராட்டம் கலெக்டரிடம் மனு அளித்தனர்

திருவண்ணாமலை, பிப்.2: திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், கடந்த 10 மாதங்களுக்கு பிறகு வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடந்தது. அப்போது, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை கலெக்டர் சந்தீப் நந்தூரி பெற்றுக்ெகாண்டார். உலகை அச்சுறுத்தும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, கடந்த மார்ச் 24ம் தேதி ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. எனவே, திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமைதோறும் கலெக்டர் தலைமையில் நடைபெறும் வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் ரத்து செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து, கடந்த சில மாதங்களாக தொலைபேசி மூலம் குறைகேட்பு முகாம் நடந்தது. அதோடு, கோரிக்கை மனுக்களை கலெக்டர் அலுவலகம் மற்றும் தாலுகா அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனாலும், கலெக்டர் மற்றும் அதிகாரிகள் நேரில் மனுக்களை பெற வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்தனர். மேலும், பெட்டியில் போடப்படும் மனுக்களுக்கு தீர்வு கிடக்காததால் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்நிலையில், கடந்த 10 மாதங்களுக்கு பிறகு திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடந்தது. அதில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயசுதா, உதவி கலெக்டர் (பயிற்சி) அமித்குமார் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, பட்டா மாற்றம், வேலை வாய்ப்பு, சுய தொழில் கடனுதவி, மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 400க்கும் ேமற்பட்ட பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

இந்நிலையில், வந்தவாசி தாலுகா, பெரணமல்லூர் அடுத்த செப்டாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள், தங்கள் கிராமத்தில் கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் மனு அளித்தனர். அதைத்ெதாடர்ந்து, கலெக்டர் அலுவலகம் முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைப்பார்த்த போலீசார் போராட்டம் நடத்த அனுமதியில்லை என எச்சரித்தனர். அதைத்தொடர்ந்து, சிறிது நேரத்துக்கு பிறகு போராட்டம் முடிவுக்கு வந்தது. இதுகுறித்து, பொதுமக்கள் கூறுகையில், செப்டாங்குளம் ஊராட்சியில் ஏற்கனவே உள்ள கல்குவாரியால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது, 3வது கல்குவாரி அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அதை அதிகாரிகள் தடுத்து நிறுத்த வேண்டும் என்றனர்.

Related Stories:

>