×

ஆவடி மாநகராட்சியில் குப்பை தொட்டிக்கு சென்ற பேட்டரி வாகனங்கள்: சுகாதார பணிகள் பாதிப்பு

ஆவடி: ஆவடி மாநகராட்சியில் 48 வார்டுகளில் 4 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு சுகாதார பணிகளை மேற்கொள்ள ஆவடி, காமராஜர் நகர், காந்தி நகர், தண்டுரை, பட்டாபிராம், திருமுல்லைவாயல் ஆகிய 6 சுகாதார கோட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் 675க்கும் மேற்பட்ட தனியார்  மாநகராட்சி ஊழியர்கள் நாள்தோறும் குப்பைகளை அகற்றி வருகின்றனர்.  இவ்வாறு, மாநகராட்சி பகுதிகளில் குப்பை அகற்ற தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 136 பேட்டரி வண்டிகளும், 27 சரக்கு ஆட்டோக்களும் வழங்கப்பட்டன. மேலும், இப்பணிகளுக்கு இருசக்கர வாகனங்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பேட்டரி வாகனங்களை வழங்கிய கோயமுத்தூரை சேர்ந்த தனியார் நிறுவனம் ஓராண்டுக்கு மட்டுமே பராமரிப்பு பணிகளை செய்தனர். பின்னர், பாரமாரிப்பு பணிகளை செய்யாததால், தற்போது 50க்கும் மேற்பட்ட பேட்டரி வாகனங்கள் பழுதடைந்து குப்பைக்கு சென்றுள்ளன.

மேலும், குப்பைகளை அள்ளும் 3 சக்கர வண்டிகளும் சரிவர பராமரிப்பின்றி உடைந்து கிடக்கின்றன. இதனால் குப்பை அள்ளும் பணிகள் நடைபெறாமல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், “ஆவடி மாநகராட்சியில் 48 வார்டுகளிலும் குப்பைகளை அகற்ற மாதந்தோறும் ₹1 கோடி செலவு செய்யப்படுகிறது. ஆனால் பல வார்டுகளில் குப்பைகள் அகற்றுவதில்லை. இந்த குப்பைகள் மக்கி கடும் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய்களை பரப்புகிறது.  சமூக ஆர்வலர்கள் பலமுறை நகராட்சி ஆணையாளருக்கு புகார்கள் அனுப்பியும் பலனில்லை.

மேலும், ஆவடி மாநகராட்சி தரம் உயர்த்தப்பட்டு இரண்டரை ஆண்டுக்கு மேலாகிவிட்டது. ஆனால் இதுவரை சுகாதாரப்பணிகள் முழுமையாக  நடைபெறுவதில்லை. எனவே, ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் கவனித்து பராமரிப்பின்றி சேதமடைந்து கிடக்கும் பேட்டரி வண்டிகள் மற்றும் மூன்று சக்கர வாகனங்களை சீரமைக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

தூய்மை பணியாளர்கள் புலம்பல்
தனியார் தூய்மை பணியாளர்கள் கூறுகையில், “எங்களுக்கு குப்பைகளை அகற்ற வாகனங்களை சரிவர தருவதில்லை. மேலும், சேதமடைந்த பேட்டரி வண்டிகள் மற்றும் மூன்று சக்கர சைக்கிள் ஆகியவற்றை தான் தருகின்றனர். இவற்றை வைத்து எங்களால் குப்பைகளை அகற்ற முடியவில்லை. இதனால், நாங்கள் சுகாதாரப்பணிகளை முழுமையாக செய்ய முடிய
வில்லை” என்றனர்.

Tags : bin ,Avadi Corporation ,
× RELATED ஆவடி மாநகராட்சியில் பட்ஜெட் தாக்கல்: 47 தீர்மானங்கள் நிறைவேற்றம்