இலவசங்களை விட மக்கள் நலன்களுக்கே முக்கியத்துவம்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், ‘இலவசங்களை கொடுப்பதை விட மக்கள் நலன்களே முக்கியவத்துவம் தரும் வகையில் சீர்த்திருத்தம் கொண்டு வரப்படும். பொது முதலீட்டில் வலுவான நம்பிக்கையைப் பேணும் வகையில், நிதி விவேகம் மற்றும் பண ஸ்திரத்தன்மை ஆகியவற்றில் தொலைநோக்கு கட்டமைப்பு சீர்திருத்தங்களை நாங்கள் பின்பற்றியுள்ளோம். ஆத்மநிர்பர்தாவை ஒரு நட்சத்திரமாக வைத்திருப்பதன் மூலம், உள்நாட்டு உற்பத்தி திறன், எரிசக்தி பாதுகாப்பு மற்றும் முக்கியமான இறக்குமதி சார்புகளைக் குறைத்துள்ளோம். அதே நேரத்தில், அரசாங்கத்தின் ஒவ்வொரு செயலிலிருந்தும் குடிமக்கள் பயனடைவதை நாங்கள் உறுதிசெய்துள்ளோம், வேலைவாய்ப்பு உருவாக்கம், விவசாய உற்பத்தித்திறன், வீட்டு வாங்கும் திறன் மற்றும் மக்களுக்கு உலகளாவிய சேவைகளை ஆதரிப்பதற்கான சீர்திருத்தங்களை மேற்கொள்கிறோம். இந்த நடவடிக்கைகள் சுமார் 7% உயர் வளர்ச்சி விகிதத்தை வழங்கியுள்ளன, மேலும் வறுமைக் குறைப்பு மற்றும் நமது மக்களின் வாழ்க்கையில் முன்னேற்றத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைய உதவியுள்ளன’ என்றார்.
உள்நாட்டு கொள்கலன் உற்பத்திக்கு ரூ.10,000 கோடி: கட்டுமானங்களுக்கும், உள்கட்டமைப்புகளுக்கும் தேவைப்படும் உயர் மதிப்புள்ள, தொழில்நுட்ப ரீதியான மேம்பட்ட உபகரணங்களின் உள்நாட்டு உற்பத்தியை வலுப்படுத்தும் விதமாக, புதிய கொள்கலன் உற்பத்தி திட்டத்துக்காக ரூ.10,000 கோடி நிதி ஒதுக்கப்படும். இது நாட்டில் கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்பு உபகரணங்களின் உற்பத்திக்கு துணைபுரிவதுடன், தீயணைப்பு உபகரணங்கள் முதல் மின்தூக்கிகள் வரை, மெட்ரோ ரயில் திட்டங்கள் மற்றும் சாலைகளுக்கு சுரங்கம் தோண்டுவதற்கு பயன்படுத்தப்படும்.
புதிய மருந்துகளை சோதிக்க 1000 மையங்கள்: புதிதாக உருவாக்கப்படும் மருந்துகளை பரிசோதித்து பார்க்க 1,000 மருந்து பரிசோதனை தளங்களை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. மும்பை, டெல்லி, பெங்களூரு, சென்னை மற்றும் ஐதராபாத் போன்ற முக்கிய நகரங்களை தாண்டி நாடு முழுவதும் இந்த மையங்கள் அமைக்கப்படும். வேலை வாய்ப்புகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட கால்நடை விவசாயி உற்பத்தியாளர் அமைப்புகளை ஆதரிக்க கடன்-இணைக்கப்பட்ட மானியத் திட்டம் துவங்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
விவசாய பொருட்களை ஒருங்கிணைக்க ஏஐ கருவி: விவசாயப் பொருட்களை ஒருங்கிணைக்க வடிவமைக்கப்பட்ட பன்மொழி ஏஐ கருவியான பாரத் விஸ்தாரை நிர்மலா சீதாராமன் அறிமுகப்படுத்தினார், மேலும் உள்ளூர் தொழில்முனைவோருக்கு அதிகாரம் அளிக்க சில்லறை விற்பனை நிலையங்களான ஷி மார்ட்ஸ் உருவாக்கப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
மாற்றுத்திறனாளிகள் திறன் திட்டம்: இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளின் தேவைகளை பூர்த்தி செய்யவும் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் ஒன்றிய அரசு உரிய நடவடிக்கையை எடுக்கும். அதன்படி, அவர்களின் கண்ணியமான வாழ்வாதாரத்திற்கான வாய்ப்புகளை உறுதி செய்வதற்கும், அதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் ‘மாற்றுத்திறனாளிகள் திறன் திட்டம்’ தொடங்கப்படும்.
கேலோ இந்தியா மிஷன்: இந்தியாவில் விளையாட்டு திறனை ஊக்குவிக்கவும், தகுதியான வீரர்களை அடையாளம் காணவும் ‘கேலோ இந்தியா திட்டம்’ ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தநிலையில், விளையாட்டுத்துறையில் அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், கேலோ இந்தியா திட்டத்தின் மூலம் தொடங்கப்பட்டுள்ள விளையாட்டுத் திறமைகளை மேலும் முன்னெடுத்து செல்லவும் அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, அடுத்த 10 ஆண்டுகளில் இந்திய விளையாட்டுத் துறையை மாற்றியமைக்க ‘கேலோ இந்தியா மிஷன்’ தொடங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
வளர்ந்த இந்தியாவை அடைய உறுதியான நடவடிக்கை: நிர்மலா சீதாராமன் பேசுகையில், ‘‘தற்போது வர்த்தகமும், பன்முகத்தன்மையும் ஆபத்தான சூழலில் இருக்கும்போது ஓர் அந்நிய சூழலை எதிர்கொள்கிறோம். வளங்கள் மற்றும் விநியோக சங்கிலிகளுக்கான அணுகல் தடைப்பட்டுள்ளன. புதிய தொழில்நுட்பங்கள் உற்பத்தி அமைப்புகளை மாற்றி வருகின்றன. நீர், மின்சாரம், முக்கிய கனிமங்கள் ஆகியவற்றுக்கான தேவை கடுமையாக அதிகரித்து வருகின்றன. இந்தியா லட்சியத்தையும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியையும் உறுதி செய்தபடி வளர்ந்த இந்தியாவை நோக்கிய நம்பிக்கையான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுக்கும். வர்த்தகமும், மூலதனத்தேவைகளும விரிவடைந்து கொண்டே உள்ளன. இந்த நிலையில் உலகளாவிய சங்கிலிகளுடன் ஆழமாக ஒருங்கிணைந்து, அதிகளவில் ஏற்றுமதி செய்து, நிலையான நீண்டகால முதலீடுகளை நாம் ஈர்க்க வேண்டும்” என்றார்.
மூலதன செலவு 12.2 லட்சம் கோடியாக உயர்வு: இந்தியாவில் 2014-15ம் நிதியாண்டில் மூலதன செலவு ரூ.2 லட்சம் கோடியாக இருந்தது. இது 2025-26ம் நிதியாண்டில் ரூ.11.2 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டது. தற்போது, அடுத்த நிதியாண்டிற்காக (2026-27) மூலதன செலவு ரூ.12.2 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. வளர்ச்சி, உள்கட்டமைப்பு மற்றும் நீண்டகால பொருளாதாரத் திறனை பெருக்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது. சாலைகள், ரயில்வே, துறைமுகங்கள், மின் திட்டங்கள் மற்றும் பிற உள்கட்டமைப்பு போன்ற பணிகளை மேற்கொள்ள இந்த நிதி வழங்கப்படும்.
பிரம்மாண்ட ஜவுளிப்பூங்கா அமைக்கப்படும்: நிர்மலா சீதாராமன், “சவாலான முறையில் பிரம்மாண்ட ஜவுளிப்பூங்காக்கள் அமைக்கப்படும். காதி மற்றும் கைத்தறி மற்றும் கைவினைத் தொழில்களை வலுப்படுத்துவதை நோக்கமாக கொண்டு மகாத்மா காந்தி கிராம சுயராஜ்ய முன்னெடுப்பு தொடங்கப்படும். ஜவுளி சுற்றுச்சூழல் வளர்ச்சியை விரைவுபடுத்துவதை அரசாங்கம் நோக்கமாக கொண்டுள்ளது” என்றார்.
சிறு, குறு, நடுத்தர தொழில்துறை வளர்ச்சிக்கு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு: சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையில் வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில், ரூ.10,000 கோடியில் சிறு நடுத்தர தொழில் வளர்ச்சி நிதி உருவாக்கப்படும். மேலும், தற்சார்பு இந்தியாவை உருவாக்க ரூ.2,000 கோடியில் குறு தொழில்துறை இடர் மூலதன நிதி ஏற்படுத்தப்படும்.விற்பனை செய்த பொருட்களுக்கான ரசீதினை சமர்ப்பித்து தள்ளுபடி பெறுதல், ஒன்றிய பொதுத்துறை நிறுவனங்கள் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையினரிடம் கட்டாயம் கொள்முதல் செய்தல், ரசீது தள்ளுபடிக்கான கடன் உறுதி, ஒன்றிய அரசின் ஆன்லைன் சந்தையையும், டிஜிட்டல் முறை தள்ளுபடி அமைப்பையும் இணைத்தல் உள்ளிட்டவையும் இதில் அடங்கும் என நிர்மலா சீதாராமன் கூறினார்.
தமிழ்நாட்டில் அரிய கனிமங்கள் வழித்தட திட்டம்: கடந்த ஆண்டு நவம்பரில் அரிய கனிமங்கள் திட்டம் தொடங்கப்பட்டது. சுரங்கம், ஆராய்ச்சி மற்றும் உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக கனிம வளம் மிக்க தமிழ்நாடு, ஒடிசா, கேரளா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் அர்ப்பணிக்கப்பட்ட அரிய பூமி வழித்தட திட்டங்களை நிறுவ ஆதரிப்போம். உள்நாட்டு ரசாயன உற்பத்தியை மேம்படுத்துவதற்கும் இறக்குமதி சார்புநிலையைக் குறைப்பதற்கும், கிளஸ்டர் அடிப்படையிலான உற்பத்தி திட்டங்களை நிறைவேற்றவும் மாநிலங்களை ஆதரிக்கும் திட்டத்தை நாங்கள் தொடங்குவோம் என்று தனது பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
ரயில்வே தனி பட்ஜெட்டுக்கு தலை முழுகி 9 ஆண்டுகள்: ஒவ்வோர் ஆண்டும் ஒன்றிய பட்ஜெட்டும் ரயில்வேக்கு என தனி பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. ஆனால், ஒன்றியத்தில் பாஜ அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, 2017 முதல் ரயில்வேக்கு என பட்ஜெட் தாக்கல் செய்யும் முறை நிறுத்தப்பட்டு விட்டது. நிதி ஆயோக்கின் விவேக் தேபராய் தலைமையிலான குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், தேவையற்ற நடைமுறைச் சிக்கல்களைக் குறைத்து, உள்கட்டமைப்பு முதலீட்டை அதிகரிப்பதே இதன் நோக்கம் என தெரிவிக்கப்பட்டது.
ஞாயிறன்று தாக்கலான முதல் பட்ஜெட்: ஒன்றிய பட்ஜெட் பெரும்பாலும் வார நாட்களிலேயே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பு பிப்ரவரி கடைசி நாளில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கமாக இருந்தது. இதன்படி 1999ம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், முந்தைய நாளான 27ம் தேதி சனிக்கிழமையன்று அப்போதைய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா பட்ஜெட் தாக்கல் செய்தார். ஒன்றிய பாஜ அரசு பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அறிவித்தது. கடந்த ஆண்டு சனிக்கிழமை தாக்கல் ஆனது. இதன்படி 2026-27 நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று முதன் முறையாக ஞாயிறன்று தாக்கல் செய்யப்பட்டது.
முன்னேற்ற பாதையில் பொருளாதாரம்: 2026-27 ஒன்றிய பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், “நாங்கள் 12 ஆண்டுகளுக்கு முன் பதவி ஏற்றதிலிருந்து நாட்டின் பொருளாதாரப்பாதை ஸ்திரத்தன்மை, நிதி ஏற்றத்தாழ்வு, நீடித்த வளர்ச்சி மற்றும் மிதமான பணவீக்கம் ஆகியவற்றை கொண்டதாக நாட்டின் பொருளாதார பாதை வகைப்படுத்தப்பட்டுள்ளது.
நிச்சயமற்ற நிலை மற்றும் இடையூறு நிலவிய காலங்களில் கூட நாங்கள் எடுத்த விவேகமான முடிவுகளின் தாக்கம் காரணமாக பொருளாதாரம் தற்போது முன்னேற்ற பாதையில் உள்ளது” என்றார்.
உயிரி மருந்து உற்பத்திக்கு ரூ.10,000 கோடி: உலக அளவில் உயிரி மருந்து உற்பத்தி மையமாக இந்தியாவை உருவாக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, ரூ.10,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அடுத்த 5 ஆண்டுகளில் இது செய்யப்படும். இது சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்தும். உள்நாட்டில் உயிரி மருந்துகளை உருவாக்குவதற்கு 3 புதிய நிறுவனங்களுடன் ஒருங்கிணைப்பு ஏற்படுத்தப்படும். ஒன்றிய மருந்து தர நிரணய ஆணையம் உலக தரத்திற்கு மேம்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.
செமி கண்டக்டர் இயக்கம் 2.0 திட்டம் அறிவிப்பு: இறக்குமதியை சார்ந்திராமல், செமி கண்டக்டர் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் இந்தியாவின் செமி கண்டக்டர் இயக்கம் 1.0 என்ற திட்டத்தை ஒன்றிய அரசு கடந்த 2021ல் பட்ஜெட்டில் அறிவித்தது. ரூ.76,000 கோடியில் அறிவிக்கப்பட்ட இந்த திட்டத்தின்படி, செமி கண்டக்டர் உற்பத்திக்கு ஏற்ற உள் கட்டமைப்புகள் உருவாக்க திட்டமிடப்பட்டது. 2030க்குள் செமி கண்டக்டர் சந்தை அளவை ரூ.9,20,000 கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்தியாவின் செமி கண்டக்டர் இயக்கம் 2.0 திட்டம் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி செமி கண்டக்டர் மற்றும் உபகரணங்கள் உற்பத்தி செய்யவும், முழுமையான வடிவமைப்பு, இந்திய அறிவுசார் சொத்துரிமை ஆகியவற்றை உருவாக்கவும், விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்தவும் இது தொடங்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பம் மற்றும் திறமையான ஊழியர்களை உருவாக்கவும் இத்துறையில் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையங்கள் அமைப்பதிலும் நாங்கள் கவனம் செலுத்துவோம் என நிர்மலா சீதாராமன் கூறினார்.
