×

மாங்காடு அருகே காவலர் தூக்கிட்டு தற்கொலை: பணிச்சுமையா போலீஸ் விசாரணை

குன்றத்தூர்: மாங்காடு அருகே போலீசார் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பணிச்சுமை காரணமாக இந்த சம்பவம் நடந்ததா என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர். விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் தாலுகாவை சேர்ந்தவர் ஆல்பர்ட் (26). இவர், கடந்த 2016ம் ஆண்டு போலீஸ் பணியில் சேர்ந்தார். தற்போது தனது பெற்றோருடன் போரூரை அடுத்த முகலிவாக்கம், ஏஜிஎஸ் காலனியில் உள்ள ஒரு வீட்டில் தங்கி உள்ளார். இந்நிலையில் நேற்று  முன் தினம் பணிக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இரவு இவரது உறவினர்கள் செல்போனில் தொடர்பு கொண்டபோது, ஆல்பர்ட் போனை எடுக்கவில்லை. சந்தேகமடைந்து, வீட்டிற்கு வந்து பார்த்தபோது, அங்கு ஆல்பர்ட் தூக்கிட்டு இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

தகவலறிந்த மாங்காடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு, அதனை பிரேதப் பரிசோதனைக்காக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்தனர். விசாரணையில், இறந்த ஆல்பர்ட், டெல்லியில் எட்டாவது சிறப்பு காவல் படையில் பணிபுரிந்து வந்தவர். கடந்த 3 நாட்களுக்கு முன்பு பணி மாறுதலாகி ஆவடியில் உள்ள ஐந்தாவது சிறப்பு காவல் படைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில், நேற்று முன்தினம், ஆல்பர்டின் பெற்றோர் சொந்த ஊருக்கு சென்று விட்டதால், வீட்டில் ஆல்பர்ட் மட்டும் தனியாக இருந்துள்ளார்.

மேலும் நேற்று முன்தினம் காலை பணிக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக ஆவடியில் உள்ள அதிகாரி செல்போனில் ஆல்பர்ட்டை தொடர்பு கொண்டு பேசியபோது, பணிக்கு வரவில்லை என்று கூறினார். இதனால் உயரதிகாரி, மீண்டும் பணிக்கு வரும்போது மேல் அதிகாரியை பார்த்து விட்டு வரும்படி கூறியதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது பணிச்சுமை காரணமா என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Policeman ,suicide ,police investigation ,Mankadu ,
× RELATED கிருஷ்ணகிரி அருகே உள்ள SBI வங்கி ATM-ஐ...