×

கழிவுநீர் கால்வாயில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்பு

பொன்னேரி: பொன்னேரி நெடுஞ்சாலையில் உள்ள திருவெங்கடபுரம் அருகே சாலையோர கழிவுநீர் கால்வாயில் நேற்று பச்சிளம் பெண் குழந்தை அனாதையாக கிடந்தது. இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, தடப்பெரும்பாக்கம் ஊராட்சி தலைவர் பாபு, ஒன்றிய கவுன்சிலர் பரிமளம் ஜெயா, வார்டு உறுப்பினர்கள் பாலாஜி, லட்சுமி ஆகியோர் அங்கு வந்து அந்த குழந்தையை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். அங்கு குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதற்கிடையில், குழந்தை பெற்று மருத்துவமனை வார்டில் இருந்த பெண் ஒருவர், அந்த குழந்தைக்கு பால் கொடுத்ததோடு, குழந்தைக்கு துணியும் அணிவித்தார். பின்னர், நேற்று போலியோ சொட்டு மருந்து தினம் என்பதால் மருத்துவமனை வளாகத்தில் நடந்த முகாமில் அந்த குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. குழந்தை தற்போது ஆரோக்கியமாக உள்ளது. இதனைத்தொடர்ந்து, பொன்னேரி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்த மருத்துவமனை நிர்வாகம், திருவள்ளுரில் உள்ள குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைக்க முடிவு செய்துள்ளது. மேலும், இதுகுறித்து புகாரின்பேரில் பொன்னேரி போலீசார் வழக்கு பதிவு செய்து, கள்ளக்காதலில் குழந்தை பிறந்ததால் குழந்தையை வீசி சென்றார்களா அல்லது பெண் குழந்தை என்பதால் வீசி சென்றார்களா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED நடப்பு நவரை பருவத்தில் முதற்கட்டமாக 8...