×

வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுனர்களுக்கு கண் சிகிச்சை முகாம்

திருவாரூர், ஜன. 30: போக்குவரத்து மாத விழாவினையொட்டி திருவாரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. சாலை விபத்துகள் மூலம் நடைபெற்று வரும் உயிரிழப்புகளை குறைக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு விழாவானது அரசு சார்பில் நடைபெற்று வருகிறது. அதன்படி நடப்பாண்டில் இந்த விழாவானது ஒரு மாத கால விழாவாக கடந்த 17 ம்தேதி முதல் துவங்கி நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இதனையொட்டி ஹெல்மெட் அணிவது, சீட் பெல்ட் அணிவது அவசியம் மற்றும் சாலை விதிகளை கடைபிடிப்பது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் துண்டுபிரசுரங்கள் வழங்குவது உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி நேற்று திருவாரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடைபெற்ற கண் சிகிச்சை முகாமில் ஓட்டுநர்கள் மற்றும் ஓட்டுநர் உரிமம் பெற வந்தவர்கள், உரிமத்தை புதுப்பிக்க வந்தவர்கள் என மொத்தம் 200 பேருக்கு அரசு மருத்துவக்கல்லூரி கண் மருத்துவர் சிவக்குமார் தலைமையில் மருத்துவர் குழுவினர் பரிசோதனை செய்து தகுந்த ஆலோசனைகளை வழங்கினர் . இதற்கான ஏற்பாடுகளை வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சண்முகவேல் தலைமையில் அலுவலர்கள் அமிர்தராஜ் ,பிரேமா ஆகியோர் செய்திருந்தனர்.

Tags : Eye treatment camp ,drivers ,Regional Transportation Office ,
× RELATED பெண்ணைக்கொன்று தண்ணீர் தொட்டியில்...