மத்திய அரசு செவிலியர்களுக்கு இணையான ஊதியம் கோரி தஞ்சை அரசு மருத்துவமனை செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

தஞ்சை, ஜன. 30: மத்திய அரசு செவிலியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தஞ்சை ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் கருப்பு பட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு செவிலியர்களுக்கு இணையான ஊதியம் மற்றும் படிகள் வழங்க வேண்டும். கொரோனா தொற்று காலத்தில் பணிபுரிந்த செவிலியர்களுக்கு அரசு அறிவித்த ஒரு மாத ஊக்க ஊதியமும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட செவிலியர்களுக்கு நிவாரணம், உயிரிழந்த செவிலியர்களின் குடும்பத்திற்கு உரிய உரிய இழப்பீடு, அரசு வேலை வழங்க வேண்டும். 6 ஆண்டுகளுக்கு மேல் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் செவிலியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். இனிவரும் காலங்களில் தொகுப்பூதிய முறையை ரத்து செய்ய வேண்டும். மத்திய அரசு செவிலியர்களை போல் 5 கட்ட காலமுறை பதவி உயர்வு மற்றும் பதவி பெயர் மாற்ற அரசு ஆணை வழங்க வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய செவிலியர்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை ராசாமிராசுதார் அரசு மருத்துவமனையில் நேற்று காலை அரசு நர்சுகள் சங்கம் சார்பில் செவிலியர்கள் கருப்பு பட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநில பொதுச்செயலாளர் வளர்மதி தலைமை வகித்தார். மாநில துணை தலைவர்கள் சந்திரா, அமுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் முடிந்த பின்னர் செவிலியர்கள் கருப்பு பட்டை அணிந்தபடி பணிபுரிந்தனர்.

Related Stories:

>