×

விழுப்புரத்தில் இடஒதுக்கீடு வழங்கக்கோரி பாமக நடத்திய போராட்டத்தால் அரசு ஊழியர்கள், மக்கள் தவிப்பு கைதிகளை நடந்தே அழைத்து சென்ற போலீசார்

விழுப்புரம், ஜன. 30: விழுப்புரத்தில் இடஒதுக்கீடு வழங்கக்கோரி பாமக நடத்திய போராட்டதால் அரசு ஊழியர்கள், பொதுமக்கள் தவித்தனர். வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கக்கோரி, பாமகவினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பேரூராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், நகராட்சி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நேற்று தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் எதிரே நேற்று பாமகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம் - திருச்சி சாலையில், நடந்த ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக சாலையை ஆக்கிரமித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டது. இதனால் புதிய பேருந்து நிலையம் மற்றும் நகருக்கு வரும் வாகனங்கள் பல்வேறு வழிகளில் திருப்பிவிடப்பட்டன. இதனால் பிரதான சாலையில் மட்டுமின்றி, மக்கள் வீடுகளுக்கு செல்லும் சாலைகளிலும் கடும் நெரிசல் ஏற்பட்டது. வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்கள் நான்குமுனை சந்திப்பு, கோலியனூர் கூட்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் திருப்பிவிடப்பட்டன. இதனால் பொதுமக்கள், வாகனங்களில் இருந்து நடுவழியில் இறக்கிவிடப்பட்டு, பல கிலோ மீட்டர் தூரம் நடந்தே செல்லும் அவலநிலை ஏற்பட்டது.

குறிப்பாக நகரில் அவசரத்துக்கு மருத்துவமனை செல்பவர்கள், அவசர பணிக்கு செல்பவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அரசு அலுவலக பணிகளும் இந்த போராட்டத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது. பல்வேறு அரசுத்துறை அலுவலகங்கள், ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தின் எதிரே போராட்டத்தில் ஈடுபட்டதால் அரசுத்துறை ஊழியர்களும், பொதுமக்களும் அலுவலகங்களுக்கு செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டனர். அதேபோல் கடலூர் உள்ளிட்ட வெளி மாவட்ட சிறையில் இருந்து, விழுப்புரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பாக விசாரணை கைதிகளை ஆஜர்படுத்துவதற்காக போலீசார் பேருந்து மற்றும் காவல்துறை வாகனங்களில் அழைத்து வந்தனர். ஆனால் போராட்டத்தால் நடுவழியில் வாகனங்கள் நெரிசலில் சிக்கி கொண்டன. போலீசார், குறித்த நேரத்திற்கு செல்ல வேண்டும் என்பதற்காக கைதிகளை விலங்குடன் வாகனங்களில் இருந்து இறங்கி பல கிலோ மீட்டர் தூரம் நடந்தே அழைத்து சென்றனர். நடு வழியில் தப்பிச் செல்லாமல் இருக்க, நாலாபுறமும் போலீசார் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பல விசாரணை கைதிகளை குறித்த நேரத்தில் அழைத்து செல்ல முடியாமல் போலீசார் தவித்தனர். பாமகவினர் போராட்டத்தில் பொதுமக்கள் மட்டுமின்றி காவல்துறையினர், அரசு ஊழியர்களும் பரிதவித்தனர்

Tags : protests ,PMK ,prisoners ,government employees ,Villupuram ,
× RELATED தேர்தல் பிரசாரத்தின்போது...