×

மதுபானங்கள் மீதான கொரோனா வரி மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிப்பு கவர்னர் கிரண்பேடி உத்தரவு

புதுச்சேரி, ஜன. 30: புதுவையில் மதுபானங்கள் மீது விதிக்கப்பட்ட கொரோனா வரியை மேலும் 2 மாதங்களுக்கு நீட்டித்து கவர்னர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.புதுச்சேரியில் கொரோனோ தொற்று பரவலையொட்டி கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக, மதுபான கடைகள், மதுபார்கள் மூடப்பட்டது. 2 மாதங்களுக்கு பிறகு மே 25ம் தேதி மீண்டும் மதுக்கடைகளை திறக்க அரசு அனுமதி அளிக்கப்பட்டது. அப்போது, மதுபானங்கள் மீது கொரோனா வரி விதிக்கப்பட்டது. இவ்வரி காலம் முதலில் ஆகஸ்ட் மாதம் வரை இருந்தது. பின்னர் நவம்பர் 30ம் தேதி வரை கொரோனா வரி என நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து நவம்பர் 29ம் தேதி கொரோனா வரியை நீக்க அரசு தரப்பில் கோப்பு அனுப்பப்பட்டது. அதனை கவர்னர் கிரண்பேடி ஏற்கவில்லை. மாறாக, ஜனவரி 31ம் தேதி வரை இவ்வரியை நீட்டித்திருந்தார்.

கொரோனா வரியால் தமிழகத்திற்கு இணையாக புதுவையிலும் மதுபானங்களின் விலை உயர்ந்திருப்பதால் மது விற்பனை சரிந்தது. இதன் காரணமாக, அரசின் வருவாய் குறைந்தது. இதனால் கொரோனா வரியை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இருப்பினும், அதனை ஏற்காத கவர்னர், தற்போது மேலும் இரு மாதங்களுக்கு மதுபானங்கள் மீதான கொரோனா வரியை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.இதுதொடர்பாக கலால்துறை துணை ஆணையர் சுதாகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சிறப்பு கலால் வரியை மேலும் இரு மாதங்களுக்கு கவர்னர் கிரண்பேடி நீட்டித்துள்ளார். இந்த உத்தரவால் வரும் மார்ச் 31ம் தேதி வரை சிறப்பு கலால் வரி அமலில் இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.கலால்வரி உயர்த்தியதால் குடிமகன்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

Tags : Corona ,Kiranpedi ,
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...