×

பெரியகுளம் நகராட்சி குப்பைக்கிடங்கில் பற்றி எரியும் தீ பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல்

பெரியகுளம், ஜன.30: பெரியகுளம் நகராட்சிக்கு சொந்தமான குப்பைக்கிடங்கில் பற்றி எரியும் தீயால் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் உள்ளிட்ட பிரச்னை ஏற்பட்டுள்ளது. பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட 30 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் மதுரை ரோட்டில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கொட்டப்படுகின்றன. குப்பைகள் கொட்டப்படும் இடத்திற்கு அருகே இருளாயியம்மாள் காலனி, இ.புதுக்கோட்டை, ஜெ.ஜெ.காலனி, எ.புதுப்பட்டி, எண்டபுளி ஆகிய கிராமங்கள் உள்ளன.இங்கு கொட்டப்படும் குப்பைகளில் பெரும்பாலான நேரங்களில் தீ பற்றி எரிந்த வண்ணம் உள்ளன. கடந்த சில நாட்களாக குப்பைகளில் தீ பல இடங்களில் அதிக அளவில் எரிந்து வருவதால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காணப்படுகின்றது. மேலும் அந்த பகுதியில் குடியிருக்கும் மக்களுக்கு மூச்சுத்திணறல், ஆஸ்துமா, இருமல் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் தற்பொழுது குளிர்காலம் ஆரம்பமான நிலையில் கூடுதலாக குப்பையில் இருந்து வரும் புகையினால் இரவு நேரங்களில் சுவாசக்கோளாறு ஏற்படுவதாகவும், ஆண்டுதோறும் இந்த குப்பைகளில் ஏற்படும் தீயினால், ஈ, கொசு ஆகியவற்றால் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.மேலும் தேனி, திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேரங்களில் அதிக புகையால் வாகன ஓட்டிகளும் அதிகம் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர். எனவே, நகராட்சி நிர்வாகம் குப்பைக்கிடங்கில் ஏற்படும் தீயை அனைத்து புகையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags : public ,Periyakulam Municipal Garbage Depot ,
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப...