×

ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியக்குழு கூட்டம் முக்கிய துறைகளின் அதிகாரிகள் கல்தா நடவடிக்கை எடுக்க கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

ஆர்.எஸ்.மங்கலம், ஜன.30: ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில் முக்கிய துறைகளின்  அதிகாரிகள் பங்கேற்கவில்லை. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.  ஆர்.எஸ்.மங்கலத்தில் கவுன்சிலர்கள் கூட்டம் ஒன்றிய குழு தலைவர் ராதிகா பிரபு தலைமையில் நடைபெற்றது. பி.டி.ஓ (கி.ஊ)பாண்டி முன்னிலை வகித்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கோட்டைராஜ் வரவேற்றார்.  கூட்டத்தில் கவுன்சிலர் யோகேஸ்வரன்(திமுக) பேசுகையில், ‘‘யூனியன் கூட்டத்தில் மின்சாரம், குடிநீர் வடிகால் வாரியம், மருத்துவத்துறை உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொள்வதில்லை. இதனால் மக்கள் பிரச்சனைகளை கூட்டத்தின் மூலம் தீர்வு காணமுடியவில்லை’’ என்றார்.கவுன்சிலர் பாண்டி(அமமுக) பேசுகையில், ‘‘மழையால் சேதமடைந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார். கவுன்சிலர் வெங்கடாஜலபதி(திமுக) பேசுகையில், ‘‘அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த பல ஆயிரம் ஏக்கர் நெல் விவசாயம் பாதிப்படைந்துள்ளது. அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் பாரபட்சமின்றி வழங்க துரித நடவடிக்கை வேண்டும். ஏ.ஆர்.மங்கலத்தில் பழுதாகியுள்ள நியாய விலை கடை கட்டிடத்திற்கு மாற்றாக புதிய கட்டிடம் கட்டி தர வேண்டும்’’ என்றார்.

கவுன்சிலர் பிரபு(திமுக) பேசுகையில், ‘‘எனது கவுன்சிலுக்கு உட்பட்ட மேலமடையில் இருந்து கொக்கூரனி சாலையை சீர் செய்து தர வேண்டும். வல்லமடை மற்றும் ஓடைக்கால் ஆகிய கிராமங்களில் ரேஷன் கடை அமைத்து தர வேண்டும்’’ என்றார். இதற்கு பதிலளித்த ஒன்றிய குழு தலைவர் ராதிகா, ‘‘யூனியன் பகுதியில் சேதமடைந்த சாலைகளின் சேத மதிப்பு குறித்து கலெக்டரிடம் மனுவாக வழங்கியுள்ளோம். கூட்டத்திற்கு தகவல் தெரிவித்தும் கலந்து கொள்ளாத மற்ற துறை அதிகாரிகள் மீது தாங்கள் கோபப்படுவது நியாயமான ஒன்றுதான். ஆகையால் கூட்டத்திற்கு வராதவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும்’’ என்றார். பிடிஓ(கி.ஊ)பாண்டி பேசுகையில், ‘‘கவுன்சிலர்கள் அனைவரின் கோரிக்கைகளும் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார். இக்கூட்டத்தில் கவுன்சிலர்கள் முஸ்ரியா பேகம், இந்திராணி, ராஜீவ் காந்தி, கமலகண்ணி உள்ளிட்ட கவுன்சிலர்களும் யூனியன் அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

Tags : meeting ,councilors ,RS Mangalam Union Committee ,departments ,
× RELATED ஏஐடியூசி போக்குவரத்து சம்மேளன குழு கூட்டம்