மதுரை, ஜன. 30: மதுரை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் அன்பழகன் தலைமை வகித்தார். கரும்பு விவசாய சங்க மாநில தலைவர் பழனிச்சாமி, ராமன் உள்ளிட்ட விவசாயிகள் பேசியதாவது: தனியார் கடைகளில் வாங்கிய விதை, பூச்சி மருந்து, உரத்தில் கலப்படம் இருந்ததால் விதை நெல் சரியாக முளைக்கவில்லை. இது தொடர்பாக புகார் கூறியதால், கமிட்டி அமைக்கப்பட்டது. ஆனால், 2 மாதமாகியும் கமிட்டி கூட்டம் கூட்டப்படவில்லை. கலப்படம் செய்த நிறுவனத்தின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது’ என கேள்வி எழுப்பினர். கலெக்டர் பேசுகையில், ‘கமிட்டி நபர்கள் மீது புகார்கள் வந்ததால், அதை கலைத்துவிட்டோம்
விவசாயிகள்: ஆளுங்கட்சியினர் தலையீட்டால், கலப்பட உரக்கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அவர்களுக்கு ஆதரவாக மாவட்ட நிர்வாகம் செயல்பட்டது. மாவட்டத்தில் 40 ஆயிரம் டன் கரும்பு இருந்தும், அரசு சர்க்கரை ஆலை ஓட்டப்படாமல் உள்ளது. அனைத்து பகுதிகளிலும் நெல் கொள்முதல் மையங்களை விரைவாக திறக்க வேண்டும். ஆளுங்கட்சி சிபாரிசு செய்யும் பகுதியில் மட்டும் தற்போது திறக்கப்படுகிறது. ஆளுங்கட்சியின் கைப்பாவையாக மாவட்ட நிர்வாகம் மாறக்கூடாது,
முதலைக்குளம் பகுதியில் 350 ஏக்கர் நெற்பயிர் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. நிவாரணம் வழங்க வேண்டும். அதேபோல, செல்லம்பட்டிக்கும், விக்கிரமங்கலம் பகுதி மக்கள் வந்து செல்ல ரயில்வே உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும்.
தற்போது சுரங்கப் பாதையால், பல்வேறு விபத்துகள் ஏற்படுகின்றன. உயர்மட்ட பாலம் மட்டுமே பிரச்னைக்கு தீர்வாகும். 2018ல் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இன்னும் பணப்பலன் கிடைக்கவில்லை. மேலும், 2019ம் ஆண்டுக்கும். இன்னும் வரவில்லை’ என கூறினர். கலெக்டர்: பயிர் காப்பீடு தொடர்பாக அரசுக்கு பரிந்துறை செய்யப்பட்டுள்ளது. விரைவாக வழங்க ஏற்பாடு செய்யப்படும். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமாரி, வேளாண் இணை இயக்குநர் விவேகானந்தன். கூட்டுறவு இணை பதிவாளர் ராஜேஷ் மற்றும் அதிகாரிகள், விவசாயிகள் பங்கேற்றனர்.