×

வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கோரி காஞ்சி, செங்கையில் கலெக்டர் அலுவலகங்களை பாமகவினர் முற்றுகை


காஞ்சிபுரம்: தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பாமக சார்பில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் 6ம் கட்டமாக, அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் நேற்று மனுகொடுக்கும் போராட்டம் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. இதைதொடர்ந்து, காஞ்சிபுரத்தில் நடந்த போராட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் உமாபதி தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் செந்தில்குமார் வரவேற்றார். மாநில துணைத் தலைவர் சக்தி கமலாம்மாள், துணைப் பொதுச் செயலாளர் பொன்.கங்காதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் பகுதியில் இருந்து ஊர்வலமாக புறப்பட்ட பாமகவினர் விளக்கடி கோயில் தெரு வழியாக வந்தனர். கீரை மண்டபம் பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி, முக்கிய நிர்வாகிகள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டனர். ஆனாலும், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, கலெக்டர் அலுவலகம் பகுதியில் ஏராளமான பாமகவினர் திரண்டு வந்தனர்.

இதையடுத்து காவலான்கேட், கலெக்டர் அலுவலக வளாக வாயில்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதிகளில் பரபரப்பு நிலவியது. இதில், மாநில இளைஞர் சங்கம் மகேஷ்குமார், வன்னியர் சங்க துணைத்தலைவர் செல்வராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் சேஷாத்ரி, நிர்வாகிகள் சரளா ராஜி, துரைராஜ், வரதராஜன், சண்முகம், தீபம் சுரேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
செங்கல்பட்டு: செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்ட பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் வன்னியர்களுக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க கோரி பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் ராட்டிணகிணறு அருகே நேற்று நடந்தது. பாமக மாநில துணை பொது செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான திருக்கச்சூர் ஆறுமுகம் தலைமை வகித்தார். செங்கல்பட்டு மாவட்ட செயலாளர்கள் (மத்திய) காரணை ராதாகிருஷ்ணன், (கிழக்கு) ராம்குமார், (வடக்கு) விநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணை பொது செயலாளர் வெங்கடேசன் வரவேற்றார்.

சமூக முன்னேற்ற சங்க மாநில செயலாளர் செல்லப்பா உள்பட பாமக நிர்வாகிகள் பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டனர். பார்த்தசாரதி, கணேசமூர்த்தி, வாசு, ஏகாம்பரம், பட்டு பாண்டியன் உள்பட ஆயிரக்கணக்கானோர் பேரணியாக சென்று செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாக அரசு மருத்துவமனை அருகே சென்றனர். அப்போது போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும் பாமகவினருக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், 20 பேர் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள், கலெக்டர் ஜான்லூயிசிடம் மனு வழங்கினர். இதுகுறித்து பாமக மாநில துணை பொது செயலாளர் திருச்சூர் ஆறுமுகம் செய்தியாளர்களிடம் கூறுகையில், வன்னியர்களுக்கு 20 சதவீதம் தனி இடஒதுக்கீடு வழங்க கோரி கடந்த நவம்பர் மாதம் முதல் பல்வேறு போராட்டங்கள் நடக்கின்றன. அரசு அலுவலகங்களில் மனு கொடுக்கப்பட்டது. 6ம் கட்டமாக கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளோம். விரைவில் தமிழக அரசு இடஒதுக்கீடு வழங்கவேண்டும். இல்லாவிட்டால், பாமக சார்பில் மிகப் பெரிய போராட்டங்கள் நடத்தப்படும் என்றார்.

Tags : Pamakavinar ,offices ,Collector ,Kanchi ,Chennai ,Vanni ,
× RELATED சேலம் அருகே கோயிலில் சாமி...