×

காசிமேடு துறைமுகம் அருகே சிறையிலிருந்து வெளிவந்த மீனவர் வெட்டிக்கொலை: 4 பேருக்கு வலை

சென்னை: காசிமேடு துறைமுகம் அருகே சிறையில் இருந்து வெளியில் வந்த மீனவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவொற்றியூர் தாங்கல் பகுதியை சேர்ந்த மீனவர் சுடர்மணி, கடந்த அக்டோபர் மாதம் கடலுக்கு மீன்பிடிக்க சென்றபோது, சக மீனவர்களுடன் ஏற்பட்ட தகராறில் 4 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இவரது அண்ணன் நாராயணன் (37), தனது தம்பியை கொன்றவர்களை பழிக்குப்பழியாக வெட்டிக் கொலை செய்வேன் என சபதம் ஏற்றதாக கூறப்படுகிறது.  இதனிடையே, கொலையாளிகளை பீர் பாட்டிலால் அடித்த வழக்கில் நாராயணன் சிறைக்கு சென்றார். பின்னர், 3 மாதத்திற்கு பிறகு சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். இவர், நேற்று காலை காசிமேடு பழைய மீன்பிடி ஏலக்கூடம் அருகே அமர்ந்து இருந்தபோது, அங்கு வந்த 4 பேர் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர்.

இதில், படுகாயமடைந்த நாராயணன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காசிமேடு போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே, ராயபுரம் காவல் உதவி ஆணையர் தினகரன் சம்பவ இடத்தை  ஆய்வு செய்தார். அப்போது, அங்கு அரிவாள், செல்போன் இருந்ததை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். மேலும் தனிப்படை அமைத்து தப்பியோடிய 4 பேரை தேடி வருகின்றனர்.

Tags : Fisherman ,jail ,harbor ,Kasimeddu ,
× RELATED வேலூர் சிறைக்குள் செல்போன் வீச முயற்சி: போலீசார் விசாரணை