பெரம்பூர்: சென்னை வியாசர்பாடி, அன்னை இந்திரா நகரை சேர்ந்தவர் மணிமாறன் (28). இவருக்கு மனைவி வினிதா மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இதற்கிடையே, கடந்த 3 மாதங்களாக தற்போதைய வாடகை வீட்டில் அடிக்கடி கழிவுநீர் அடைப்பு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் இந்த வீட்டை காலி செய்துவிட்டு வேறு வீட்டுக்கு செல்லலாம் என்று மணிமாறனிடம் மனைவி வினிதா தொந்தரவு செய்து வந்துள்ளார். இதுதொடர்பாக கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்றிரவு வழக்கம் போல் மதுபோதையில் மணிமாறன் வீடு திரும்பியுள்ளார். அப்போது அவரிடம் இந்த வீட்டில் இன்றும் கழிவுநீர் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வீட்டை உடனடியாக காலி செய்ய வேண்டும் என்று மனைவி வினிதா கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் மதுபோதையில் இருந்த மணிமாறன் ஆத்திரமாகி, மீன் வெட்டும் கத்தியால் மனைவி வினிதாவை சரமாரி வெட்டியுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் வசிக்கும் முருகன் (55) என்பவர் ஓடிவந்து தடுத்துள்ளார். இதில் அவருக்கு தலையில் பலத்த வெட்டு விழுந்துள்ளது.
பின்னர் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து, மணிமாறனை மடக்கி பிடித்தனர். படுகாயம் அடைந்த வினிதா, முருகன் ஆகிய 2 பேரையும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவரும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இப்புகாரின்பேரில் எம்.கே.பி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மனைவி மற்றும் பக்கத்து வீட்டுக்காரரை கத்தியால் வெட்டிய மணிமாறனை இன்று காலை கைது செய்து விசாரிக்கின்றனர்.
