×

கருங்கலில் சாலைகளை சீரமைக்கக்கோரி காங்கிரஸ் உண்ணாவிரதம்

கருங்கல், ஜன.30 : கருங்கலில் சாலைகளை சீரமைக்க கோரி காங்கிரஸ் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் 2 எல்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்டனர். குமரி மாவட்டம் கருங்கல்,  பாலப்பள்ளம், கீழ்குளம், கிள்ளியூர், புதுக்கடை, மத்திகோடு, பாலூர்,  திப்பிறமலை, முள்ளங்கினாவிளை, மிடாலம், இனையம்  புத்தன்துறை, பைங்குளம்,  முஞ்சிறை ஆகிய 13 ஊராட்சி, பேரூராட்சிகளில்  உள்ள பல்வேறு சாலைகள்  சேதமடைந்து  குண்டும்  குழியுமாக காணப்படுகிறது. இந்த சாலையில்  பொதுமக்கள் வாகனங்களில் செல்ல மிகவும்  சிரமப்படுகிறார்கள்.  தினமும் விபத்துகள் ஏற்படுகிறது.   இந்த சாலைகளை  சீரமைக்க நிதி  ஒதுக்கப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை சாலை  பணிகள் தொடங்கப்படவில்லை. நிதி  ஒதுக்கீடு செய்து, நிர்வாக அனுமதி வழங்கிய  பிறகும் சாலை பணிகளை தொடங்காத அதிகாரிகளை கண்டித்தும், பழுதடைந்துள்ள  சாலைகளை உடனடியாக சீரமைக்க கேட்டும் நேற்று காங்கிரஸ் சார்பில்  கருங்கல் பேருந்து நிலையம் முன் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

 குமரி  மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் எம்எல்ஏ தலைமை  வகித்தார்.  மாநில காங்கிரஸ் துணை தலைவர் டாக்டர் சாமுவேல் ஜார்ஜ், வட்டார தலைவர் டென்னிஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிரின்ஸ் எம்எல்ஏ, மாநில  பொதுக்குழு உறுப்பினர் டைட்டஸ்,  மாநில பொதுச்செயலாளர் ஆஸ்கர் பிரடி,  கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜோபின் சிறில்,மாவட்ட செயலாளர் ஐ.ஜி.பி. லாரன்ஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
  கிள்ளியூர் தாசில்தார் ராஜசேகர், கருங்கல் பேரூராட்சி செயல் அலுவலர்  ஜோஸ்லின் ராஜ், கிள்ளியூர் பேரூராட்சி ெசயலாளர் ஏசுபாலன் மற்றும் அதிகாரிகள்   பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 20 நாட்களில் 13 பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் உள்ள பணிகளை செய்து முடிப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து மதியம் போராட்டம் கைவிடப்பட்டது. ராஜேஷ்குமார் எம்எல்ஏ கூறுகையில், 20 நாட்களில் பணிகளை முடிக்காவிட்டால் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.

Tags : Congress ,roads ,
× RELATED புதுச்சேரியில் வாக்குப்பதிவு...