கொரோனா சிறப்பு ஊதியம் வழங்க கோரி கருப்பு பேட்ஜ் அணிந்து செவிலியர்கள் போராட்டம்

கிருஷ்ணகிரி, ஜன.30: கொரோனா கால சிறப்பு ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் செவிலியர் சங்கத்தினர் கருப்பு பேட்ஜ் அணிந்து கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் பத்மினி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் வெங்கட்ராமன் சீதா, செயலாளர் முருகன், துணைத் தலைவர் முனியப்பன், துணை செயலாளர் காந்தி, பொருளாளர் தனலட்சுமி, இணை பொருளாளர் சுதாகர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். போராட்டம் குறித்து செவிலியர்கள் கூறியதாவது: மத்திய அரசு செவிலியர்களுக்கு இணையான ஊதியம் மற்றும் படிகள் வழங்க வேண்டும்.

கொரோனா தொற்று காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு அரசு அறிவித்த ஊக்க ஊதியம், கொரோனாவால் பாதிக்கப்பட்ட செவிலியர்களுக்கு நிவாரணம் மற்றும் உயிரிழந்த செவிலியர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். 6 ஆண்டுகளுக்கு மேல் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் போராட்டம் நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Related Stories:

>