×

ஜனவரி மாதத்தில் மட்டும் நெல்லை மாவட்டத்தில் 697% கூடுதல் மழை அணைகளில் 97 சதவீதம் நீர் இருப்பு

நெல்லை, ஜன. 30: நெல்லை மாவட்டத்தில் ஜனவரி மாதத்தில் மட்டும் 697 சதவீதம் கூடுதல் மழை கிடைத்துள்ளது. இதனால் அணைகளில் 97 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. நெல்லை மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், காணொலி மூலம் நேற்று நடந்தது. கலெக்டர் விஷ்ணு தலைமை வகித்துப் பேசியதாவது: நெல்லை மாவட்டத்தின் இயல்பான ஆண்டு மழையளவு 814.80 மிமீ. கடந்த ஆண்டு, அதாவது 2020 டிசம்பர் மாதம் வரை 716.92 மிமீ மழை மட்டுமே கிடைத்தது. இது ஆண்டின் வழக்கமான மழையளவை விட 12 சதவீதம் குறைவு. எனினும் ஜனவரி மாதத்தில் கனமழை பெய்து பெருவெள்ளம் ஏற்பட்டது. ஜனவரி மாதத்தில் வழக்கமான மழையளவு 50.20 மிமீ மட்டுமே ஆகும். ஆனால் இதுவரை ஜனவரி மாதத்தில் மட்டும் 349.91 மிமீ மழை கிடைத்துள்ளது. இது இயல்பான மழையளவை விட 697 சதவீதம் அதிகமாகும். கடந்த ஆண்டு இதே காலத்தில் அணைகளில் 79.20 சதவீதம் மட்டுமே நீர் இருப்பு இருந்த நிலையில், இந்த ஆண்டு அணைகளில் தற்போது 97 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. இவ்வாறு கலெக்டர் பேசினார்.

கூட்டத்தில் காணொலி மூலம் விவசாயிகளிடம் பெற்ற மனுக்களுக்கு பதில் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், வேளாண்மை துறை இணை இயக்குநர் கஜேந்திர பாண்டியன், நேர்முக உதவியாளர் (வேளாண்மை) அசோக்குமார் மற்றும் அரசுத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்றைய நிலவரப்படி, 140.45 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 672 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து விநாடிக்கு 794 கன அடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறக்கப்படுகிறது. 156 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணை நீர்மட்டம் 149.21 அடியாக உள்ளது. 118 அடி கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 116.85 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 213 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து விநாடிக்கு 445 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை 740 கால்வரத்து குளங்கள், 550 மானாவாரி குளங்கள் என மொத்தம் 1,290 குளங்கள் உள்ளன. இதில் 82 கால்வரத்து குளங்கள், 22 மானாவாரி குளங்கள் என 104 குளங்களில் 3 மாதத்திற்கு தேவையான தண்ணீரும், 382 கால்வரத்து குளங்கள், 244 மானாவாரி குளங்கள் என மொத்தம் 626 குளங்களில் 2 மாதங்களுக்கு தேவையான தண்ணீரும், 264 கால்வரத்து குளங்கள், 256 மானாவாரி குளங்கள் என 520 குளங்களில் ஒரு மாதத்திற்கு தேவையான தண்ணீரும் இருப்பு உள்ளது. 12 கால்வரத்து குளங்கள், 28 மானாவாரி குளங்கள் வறண்டு காணப்படுகின்றன. கிணறுகளில் சராசரியாக 1 மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை பாசனம் மேற்கொள்ளும் அளவிற்கு நீர் உள்ளது. கணக்கீடு முடிந்ததும் இழப்பீடு கூட்டத்தில் கலெக்டர் கூறுகையில், நெல்லை மாவட்டத்தில் ஜனவரி மாதத்தில் மழையால் பாதிக்கப்பட்ட நெல், பயறு, வாழை மற்றும் காய்கறி ஆகிய பயிர்களுக்கு வருவாய் துறை, வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை அலுவலர்கள் மூலம் கணக்கெடுப்பு நடந்து வருகிறது. கணக்கெடுப்பு முடிந்ததும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும், என்றார்.

Tags : district ,Nellai ,
× RELATED நெல்லை அருகே பள்ளி வேன் கவிழ்ந்து...