புதுடெல்லி: நான்காண்டுகளாக தலைமறைவாக இருந்த பாலியல் பலாத்கார குற்றவாளி துப்பாக்கிச் சூட்டிற்குப் பிறகு கைது செய்யப்பட்டான். டெல்லி பிந்தாபூர் பகுதியைச் சேர்ந்த கரன் டோல்டானி (33) என்பவன், கடந்த 2016ம் ஆண்டு தனது வீட்டுப் பணிப்பெண்ணின் சிறு வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டான். இந்த வழக்கில் அவனுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், 2022ம் ஆண்டு தனது மனைவியின் உடல்நிலையைக் காரணம் காட்டி 28 நாட்கள் இடைக்கால ஜாமீனில் வெளியே வந்தான். அந்த சமயத்திலும் தனது குடும்பத்திற்கு நெருக்கமான பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் மற்றொரு வழக்கு பதியப்பட்டது. ஜாமீன் காலம் முடிந்ததும் நீதிமன்றத்தில் சரணடையாமல், கடந்த நான்காண்டுகளாக அவன் தலைமறைவாக இருந்து வந்தான்.
அவனைப் பிடிக்க டெல்லி குற்றப்பிரிவு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், குருகிராம் பகுதியில் உள்ள கம்ரோஜ் சுங்கச்சாவடி அருகே அவன் வரவிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், நேற்று குறிப்பிட்ட பகுதியில் போலீசார் வலை விரித்து காத்திருந்தனர். அப்போது அங்கு வந்த கரனை போலீசார் சுற்றி வளைத்தபோது, இரு தரப்பிற்கும் இடையே சிறிது நேரம் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இறுதியில் போலீசார் அவனைப் மடக்கிப் பிடித்தனர். விசாரணையில், தலைமறைவாக இருந்த காலகட்டத்தில் அவன் ஒரு கால் சென்டரில் வேலை பார்த்து வந்தது தெரியவந்தது. தற்போது நீதிமன்றக் காவலில் உள்ள அவன், தனது பழைய தண்டனையையும் புதிய குற்றச்சாட்டுகளையும் எதிர்கொள்ள இருக்கிறான்.
