×

வரி செலுத்தாத தனியார் வணிக வளாகத்தின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

ஊட்டி, ஜன. 30: ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வரி, வாடகை செலுத்தாமல் ஏராளமான கடைகள் இயங்கி வருகின்றன. இது போன்று இயங்கி வரும் கடைகளின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியிருந்தது. எனினும், பெரும்பாலான நிறுவனங்கள் முறையாக வரி செலுத்தாமல் காலம் தாழ்த்தி வந்தன. சேரிங்கிராஸ் பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகமும் முறையாக வரி செலுத்தவில்லை. இதனை தொடர்ந்து, பொறியாளர் ராஜேந்திரன் தலைமையில் அங்கு சென்ற அதிகாரிகள் வரி செலுத்தாத தனியார் வணிக வளாகத்திற்கு செல்லும் குடிநீர் இணைப்பை துண்டித்தனர். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதே போன்று நகரில் வரி செலுத்தாமல் உள்ள பல கட்டிடங்களின் குடிநீர் இணைப்பை துண்டிக்க நகராட்சி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.  நகராட்சி பொறியாளர் ராஜேந்திரன் கூறுகையில், ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஏராளமான கட்டிடங்களின் உரிமையாளர்கள் வரி ெசலுத்தாமல் உள்ளனர். குறிப்பாக, வணிக ரீதியாக பயன்படுத்தப்பட்டு வரும் கட்டிடங்களுக்கு வரி செலுத்தாமல் உள்ளனர். இதனால், நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே, உடனடியாக வரி ெசலுத்தும்படி பல முறை கூறியும் வரி செலுத்தவில்லை. இதனால் அவர்களின் கட்டிடங்களில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டு வருகிறது. நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வரி செலுத்தாமல் உள்ள வணிக நிறுவனங்கள் உடனடியாக வரி மற்றும் வாடகை போன்றவைகளை நகராட்சி நிர்வாகத்திற்கு செலுத்த வேண்டும். தவறும்பட்சத்தில், இது போன்று சம்பந்தப்பட்ட கட்டிடங்களுக்கு செல்லும் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்படும், என்றார்.

Tags :
× RELATED நீலகிரி மாவட்டத்தில் வாக்குச்சாவடி...