அகமதாபாத்: தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த இளம்பெண்ணுக்கு பாலியல் பலாத்காரம் செய்ததாக மருத்துவமனை ஊழியர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத் சபர்மதி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் 29 வயது இளம்பெண் ஒருவர், தூக்க மாத்திரைகளை அதிகமாக உட்கொண்டதால் கடந்த 2025ம் ஆண்டு அக்டோபர் 19ம் தேதி தீவிர சிகிச்சைப் பிரிவில் (ஐசியூ) அனுமதிக்கப்பட்டார். மருந்துகளின் தாக்கத்தால் அரை மயக்க நிலையில் படுக்கையில் இருந்த அவரை, அக்டோபர் 20ம் தேதி அதிகாலையில் ஊழியர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
திடீரென சுயநினைவு திரும்பிய அப்பெண் கூச்சலிட்டதை அடுத்து, அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதுகுறித்து பணியில் இருந்த ஊழியர்கள் மற்றும் பெற்றோரிடம் உடனடியாக தெரிவிக்கப்பட்ட நிலையில், சிசிடிவி காட்சிகளை காட்டுமாறு மருத்துவமனை நிர்வாகத்திடம் தந்தை விடுத்த கோரிக்கை புறக்கணிக்கப்பட்டதாக தெரிகிறது. சம்பவத்தன்றே மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அப்பெண்ணின் உடல்நிலை மீண்டும் மோசமடைந்ததால், வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது குணமடைந்த நிலையில், நேற்று முன்தினம் சபர்மதி காவல் நிலையத்தில் அவர் முறைப்படி புகார் அளித்தார்.
திருமண வாழ்வில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பெற்றோருடன் வசித்து வரும் அப்பெண் அளித்த புகாரின் பேரில், போலீசார் பாலியல் துன்புறுத்தல் பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். சம்பவத்தின் போது பணியில் இருந்த குறிப்பிட்ட ஊழியரின் அடையாளத்தை குடும்பத்தினர் பின்னர் கண்டறிந்ததாகவும் போலீசாரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
