×

மத்திய பட்ஜெட்டில் ஜி.எஸ்.டி வரி குறைக்க கோவை தொழில்துறையினர் எதிர்பார்ப்பு

கோவை, ஜன. 30:  மத்திய பட்ஜெட்டில் ஜிஎஸ்டி வரியை குறைக்கவும், மூலப்பொருள் விலையை குறைக்கவும் அறிவிப்பு தேைவ என கோவை தொழில்துறையினர் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். கோவை  மாவட்டத்தில் சுமார் 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான சிறு,குறு, நடுத்தர மற்றும் பெரும் தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.  பவுண்டரி, டெக்ஸ்டைல்ஸ், பவர்லூம், வெட் கிரைண்டர்ஸ், பம்புகள்,  பிளாஸ்டிக்  தொழிற்சாலைகள் என சுமார் 60 சதவீதம் தொழிற்சாலைகள்  கிராமப்புறங்களிலும்,  40 சதவீதம் தொழிற்சாலைகள் நகர்புறங்களிலும்  செயல்படுகின்றன. சுமார் 5 லட்சம்  தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். கொரோனா ஊரடங்கிற்கு பிறகு தொழில்நிறுவனங்கள் வாழ்வா, சாவா போராட்டத்தில் உள்ளன. இந்நிலையில், மத்திய பட்ஜெட்டில் ஆறுதலான அறிவிப்பு வெளிவராதா? என கோவை தொழில்துறையினர் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

கோவை மாவட்ட சிறுதொழில்கள் சங்க  (கொடிசியா) தலைவர் ரமேஷ்பாபு கூறியதாவது: எம்.எஸ்.எம்.இ  தொழில்நிறுவனங்களுக்கு முன்னுரிமை தரப்பட வேண்டும். இவற்றுக்காக, சிறப்பு  பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும். மூலப்பொருட்களின் விலை உயர்வை  கட்டுப்படுத்த வேண்டும். தொழில்நிறுவனங்களுக்கு ரூ.3 கோடி வரை பினை இல்லா  கடன் வழங்க வேண்டும்.  ரயில், விமான போக்குவரத்தை அதிகரிக்க வேண்டும்.  இவ்வாறு ரமேஷ் பாபு கூறினார். கோவை பவுண்டரி அதிபர்கள் சங்க தலைவர் சிவசண்முககுமார் கூறியதாவது: ஸ்டீல்  உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை உயர்வு தொடர்ந்து நீடித்தால் தொழில்  நிறுவனங்களால் மீண்டு எழ முடியாது.
பொதுத்துறை நிறுவனங்கள் சார்பாக  எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களுக்கு 25 சதவீதம் ஜாப் ஆர்டர்கள் தரப்படுகிறது.  அதே போல் மைக்ரோ தொழில்நிறுவனங்களுக்கும் குறிப்பிட்ட சதவீதம் வரை ஜாப்  ஆர்டர்கள் தரப்பட வேண்டும்.
இவ்வாறு சிவசண்முககுமார் கூறினார். தமிழ்நாடு ஊரக குறுந்தொழில் முனைவோர் சங்க (டேக்ட்) கோவை மாவட்ட தலைவர் ஜேம்ஸ் கூறியதாவது: கொரோனா  தாக்கம் துவங்கி மூலப்பொருள் விலை ஏற்றம் வரை, ஜாப் ஆர்டர்கள் கிடைப்பெற  முடியாமலும்,  வங்கிகளில் கடன் பெற முடியாமலும் கடுமையான பொருளாதார  நெருக்கடிகளை தொழில் முனைவோர்கள் சந்தித்து வருகின்றனர். குறுந்தொழில்களை  பாதுகாக்க குறைந்தபட்சம் ஒரு லட்சம் முதல் 5 லட்சம் வரை நிபந்தனையின்றி  கடனுதவி வழங்க வேண்டும்.

தொழில்சார்ந்த அனைத்து மூலப்பொருட்களுக்கும்,  உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கும் 5 சதவீதம் ஜி.எஸ்.டி வரி மட்டுமே  விதிக்க வேண்டும். மூலப்பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த தனி கமிட்டி  அமைக்க வேண்டும்.
இவ்வாறு ஜேம்ஸ் கூறினார். இதுகுறித்து  கோவை மாவட்ட பம்புசெட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர் சங்க (கோப்மா) தலைவர்  மணிராஜ் கூறியதாவது: ஆரம்பத்தில் 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை மூலப்பொருட்களின் விலை உயர்ந்தது. இது, கட்டுக்குள் வரும் என எதிர்பார்த்த நிலையில், நேர்மாறாக உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக பொருட்கள் உற்பத்திக்கு கூடுதலாக முதலீடு செய்ய வேண்டியுள்ளது. இதனால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் விலையும் உயர்த்த வேண்டிய சூழ்நிலை உள்ளது. மூலப்பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். சிறு, குறு தொழில்களுக்கு விதிக்கப்படும் ஜி.எஸ்.டி வரியை 5 சதவீதமாக குறைக்க வேண்டும். கொரோனா காலத்தில் வங்கி கடன்களை திருப்பி செலுத்த 6 மாதம் அவகாசம் அளிக்கப்பட்டபோது விதிக்கப்பட்ட வரிகளை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு மணிராஜ் கூறினார்.

கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் முனைவோர் சங்க (காட்மா) தலைவர்  சிவக்குமார் கூறியதாவது: மூலப்பொருட்களின் விலை ஏற்றத்தால் சிறு, குறு தொழில்முனைவோர் உற்பத்தியை குறைத்துள்ளனர். இதனால் தொழிலாளர்களுக்கு வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கின்போது பல கடன் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. ஆனால் அது பெரும்பாலான சிறு,குறு தொழில்முனைவோர்களுக்கு கிடைக்கவில்லை. ஜி.எஸ்.டி வரி விதிப்பை அனைத்து பொருட்களுக்கும் 5 சதவீதமாக குறைக்க வேண்டும். ஜி.எஸ்.டி வரி செலுத்துவதில் உள்ள நடைமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும். இவ்வாறு சிவக்குமார் கூறினார்.

Tags : industrialists ,Coimbatore ,
× RELATED இந்தியா கூட்டணிக்கு பட்டாசு உற்பத்தியாளர்கள் ஆதரவு