×

சத்தியமங்கலம் பகுதியில் அறுவடை செய்து களத்தில் குவிந்து கிடக்கும் நெல்

சத்தியமங்கலம், ஜன.30: சத்தியமங்கலம் வட்டாரத்திலுள்ள கீழ்பவானி பாசன பகுதிகளான செண்பகபுதூர், தங்கநகரம், ஜல்லியூர்,  பெரியூர், உக்கரம், மில்மேடு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் பயிரிடப்பட்ட நெல் தற்போது இயந்திரங்கள் மூலம் அறுவடை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பகுதியில் அறுவடை செய்யப்படும் நெல்லை அரசு மூலம் நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் சத்தியமங்கலம் அருகே உள்ள செண்பகபுதூர் பகுதியில் நெல் கொள்முதல் நிலையத்தில் தினமும் ஆயிரம் மூட்டைகள் வரை கொள்முதல் செய்யப்படுகிறது. ஒரு நாளைக்கு 10 ஆயிரம் மூட்டைகள் வரை அறுவடை செய்து களத்தில் போடப்பட்ட நெல் தேங்கியிருக்கும் நிலையில் ஆயிரம் மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இதுகுறித்து சத்தியமங்கலத்தை சேர்ந்த விவசாயி ஸ்ரீ ராம் கூறியதாவது:இப்பகுதியில், தற்போது நெல் அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் ஒரே ஒரு நெல் கொள்முதல் நிலையம் மட்டுமே உள்ளதால் விவசாயிகள் நெல்லை கொண்டு சென்று விற்பனை செய்ய கொள்முதல் நிலையத்தில் பல நாட்கள் காத்திருக்க வேண்டி உள்ளது.

ஒரு சில விவசாயிகள் நெல் அறுவடை செய்து நெல் வயலில் களம் அமைத்து நெல்லை கொட்டி காவல் காத்து வருகின்றனர். நெல் வியாபாரிகள் குறைந்த விலைக்கு நெல்லை விலைக்கு கேட்பதால் விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்யலாம் என நினைத்தும் பிரயோஜனம் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 10 ஆயிரம் மூட்டைகள் வரை நெல் அறுவடை செய்யப்படும் நிலையில் ஆயிரம் மூட்டை நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதோடு வார விடுமுறையான ஞாயிறு மற்றும் குடியரசு தினம், தைப்பூசம் என தொடர் விடுமுறை நாட்களில் நுகர்பொருள் வாணிபக் கழக பணியாளர்கள் விடுமுறை எடுத்துக்கொள்வதோடு நெல் கொள்முதல் நிலையத்திற்கு விடுமுறை அளித்ததால் இந்த வாரத்தில் மட்டும் மூன்று நாட்கள் நெல் கொள்முதல் நிலையம் செயல்படவில்லை.

எனவே, இப்பகுதியில் கூடுதலாக மற்றும் பெரியூர் மற்றும் மில்மேடு பகுதியில் கூடுதலாக இரண்டு இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தீவிரமாக நெல் அறுவடை நடைபெற்றுவரும் நிலையில் வார விடுமுறை மற்றும் அரசு விடுமுறை நாட்களிலும் நெல் கொள்முதல் நிலையத்தில் விடுமுறை அளிக்கப்படாமல் தொடர்ச்சியாக கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Paddy ,area ,field ,Satyamangalam ,
× RELATED சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம்!:...