×

கோபி அருகே ஆக்கிரமிப்பு கடைகள், வீடுகள் அகற்றம்

கோபி, ஜன.30:கோபி அருகே நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் 20 ஆண்டுகளாக ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகள், வீடுகளை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றினர். கோபி அருகே உள்ள நல்லகவுண்டன் பாளையத்தில் இருந்து கலிங்கியம், அவ்வையார் பாளையம், செம்மாண்டாம்பாளையம் வழியாக குருமந்தூர் சாலை வரை 10 கி.மீ. தூரத்திற்கு கடந்த 20 ஆண்டுகளாக 100க்கும் மேற்பட்ட கடைகள், வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்தது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற கடந்த ஓராண்டுக்கு முன்பு நெடுஞ்சாலைத்துறைக்கு சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, கடந்த 6 மாதமாக ஆக்கிரமிப்புகளை அகற்ற கடை உரிமையாளர்களுக்கு நெடுஞ்சாலைத்துறையினர் கால அவகாசம் கொடுத்தனர். ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீசும் வழங்கி உள்ளனர்.

இந்நிலையில், கடை உரிமையாளர்கள் பலர் ஆக்கிரமிப்புகளை அகற்ற முன் வராத நிலையில் நேற்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்களை இடித்து அகற்றினர். மேலும், அங்கு இருந்த உணவகம் ஒன்றில் இருந்த பொருட்களை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றினர். அப்போது  கடை உரிமையாளர்கள் கூடுதல் கால அவகாசம் கேட்டு  நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், நல்லகவுண்டன் பாளையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : shops ,demolition ,houses ,Kobe ,
× RELATED ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி