×

மானியத்துடன் சூரிய மின்வேலி அமைக்க விண்ணப்பிக்கலாம்

ஈரோடு, ஜன.30: மானியத்துடன் கூடிய சூரிய சக்தி மின்வேலி அமைக்கும் திட்டத்திற்கு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கலெக்டர் கதிரவன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சூரிய மின்வேலி அமைப்பானது சூரிய ஒளி மின்தகடுகள் மூலம் கிடைக்கும் மின்சாரத்தால் இயங்க கூடியது. சூரிய ஒளி மின்வேலி அமைப்பதனால் மின் வேலியில் செலுத்தப்படும் உயா் மின் அழுத்தத்துடன் கூடிய குறுகிய உந்து விசை மின் அதிர்ச்சியினால் யானை, காட்டுபன்றி போன்ற விலங்குகளால் விவசாயிகள் பயிரிடும் பயிர்களுக்கு ஏற்படும் சேதாரம் தவிர்க்கப்படுகிறது.

விவசாயிகள் தங்களின் பகுதிக்கு ஏற்றவாறு மின்வேலி அமைப்பினை தேர்வு செய்து கொள்ளலாம். தனிநபர் விவசாயிக்கு அதிகபட்சமாக 5 ஏக்கருக்கு மின்வேலி அமைக்க மானியம் வழங்கப்படும். மேலும், சூரியசக்தி மின்வேலி அமைப்பிற்கான செலவுத் தொகையில் 50 சதவீதம் மானியம் வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விருப்பமுள்ள ஈரோடு மாவட்ட விவசாயிகள் வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகங்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Tags :
× RELATED கொடிவேரி அணை அருகே பவானி ஆற்றில் மூழ்கி 2 பேர் பலி