×

தனியார் மருத்துவமனைகளில் தவறான சிகிச்சையால் 2 சிறுவர்கள் பலி?: போலீசில் பெற்றோர் புகார்

சென்னை: வில்லிவாக்கம் அகத்தியர் நகரை சேர்ந்தவர் நாகராஜன். இவரது மகள் ரியாசுக்கு (6), கடந்த 24ம் தேதி தொண்டையில் வலி ஏற்பட்டதால் வில்லிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய சிறுமிக்கு, 2 நாட்களில் மீண்டும் தொண்டையில் வலி அதிகமானது. இதனால், 27ம் தேதி மீண்டும் மருத்துவமனையில் சேர்த்தனர். அவளை பரிசோதித்த டாக்டர்கள், வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளனர். இதையடுத்து, அண்ணாநகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சிறுமி வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால், அதிர்ச்சியடைந்த நாகராஜ், தனியார் மருத்துவமனையின் தவறான சிகிச்சையால் மகள் இறந்ததாக  வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்:    பள்ளிக்கரணை நாராயணபுரம் ராஜேஷ் நகர் முதல் மெயின் ரோட்டை சேர்ந்தவர் ஸ்ரீதர், தனியார் கல்லூரி பேராசிரியர். இவரது மகன் நவீன் (5), வேளச்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தான். இவனுக்கு ஆணிக்கால் காரணமாக நேற்று முன்தினம் மாலை அதிக வலி ஏற்பட்டது. இதனால், மாலை 6 மணிக்கு பள்ளிக்கரணை வேளச்சேரி மெயின் ரோட்டில் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்த மருத்துவர்கள், சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். அதற்கு பெற்றோரும் சம்மதித்தனர். இதையடுத்து மருத்துவர்கள்   சிறுவனை   ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்து சென்றுள்ளனர். இந்நிலையில், 6.45 மணிக்கு மருத்துவர்கள் கோபிநாத், கணேசன் ஆகியோர், சிறுவன் இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் கதறி அழுதனர்.

இதுகுறித்து பள்ளிக்கரணை போலீசில் பெற்றோர் புகார் அளித்தனர். அதில், தவறான சிகிச்சையே தனது மகன் சாவுக்கு காரணம். எனவே, தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் கோபிநாத், கணேசன் மற்றும் மயக்கவியல் நிபுணர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்து இருந்தனர்.  அதன்பேரில் போலீசார், சிறுவன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Tags : boys ,hospitals ,Parents ,
× RELATED தமிழ், மலையாளத்தில் சாதித்த நிலையில்...